வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சச்சின், மெக்கல்லம்(நியூசிலாந்து), டிவில்லியர்ஸ்(தென்னாப்பிரிக்கா) ஆகியோரின் சாதனைகளை ரோஹித் சர்மா முறியடிக்க வாய்ப்புள்ளது. 

ரோஹித் சர்மா சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவர். அலட்டிக்கொள்ளாமல் சிரமப்படாமல் தனது பேட்டிங் டெக்னிக்கின் மூலம் எளிதாக சிக்ஸர்கள் விளாசக்கூடியவர் ரோஹித் சர்மா. மிகக்குறைந்த போட்டிகளில் அதிகமான சிக்ஸர்கள் விளாசியவர் ரோஹித். 

சர்வதேச கிரிக்கெட்டில்(டெஸ்ட், ஒருநாள், டி20) அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்களில் தோனிக்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். சச்சின், கங்குலி, யுவராஜ், சேவாக் போன்ற வீரர்களை எல்லாம் எளிதாக பின்னுக்கு தள்ளிவிட்டார் ரோஹித். 

502 இன்னிங்ஸ்களில் ஆடி 342 சிக்ஸர்களை விளாசி, அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர்களில் தோனி முதலிடத்தில் உள்ளார். 302 இன்னிங்ஸ்களிலேயே 304 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் தோனிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் 194 சிக்ஸர்களுடன் 8வது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக 186 சிக்ஸர்களுடன் இருந்த ரோஹித், அந்த போட்டியில் 8 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் கங்குலியை எல்லாம் பின்னுக்கு தள்ளி 8வது இடத்தை பிடித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 சிக்ஸர்கள் விளாசினால் சச்சினை(195 சிக்ஸர்கள்) முந்திவிடுவார் ரோஹித். அதேபோல 7 சிக்ஸர்கள் விளாசினால் மெக்கல்லத்தையும் 11 சிக்ஸர்கள் விளாசினால் டிவில்லியர்ஸையும் ரோஹித் முந்திவிடுவார். அடுத்த போட்டியில் 11 சிக்ஸர்கள் அடிக்க முடியாவிட்டாலும் இந்த தொடர் முடிவதற்குள் தோனியின் சாதனை வரை ரோஹித் முறியடிக்க வாய்ப்புள்ளது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களில் 351 சிக்ஸர்களுடன் அஃப்ரிடி முதலிடத்திலும் 275 சிக்ஸர்களுடன் கெய்ல் இரண்டாமிடத்திலும் 270 சிக்ஸர்களுடன் ஜெயசூரியா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 217 சிக்ஸர்கள் விளாசிய தோனி நான்காமிடத்தில் உள்ளார். தோனியின் சிக்ஸர் சாதனையை வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவதற்கு உள்ளாகவே ரோஹித் முறியடித்து நான்காமிடத்தை பிடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனால் அடுத்த போட்டியில் ரோஹித் சர்மாவின் அதிரடியை காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.