வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை வென்று இந்திய அணி டி20 தொடரை வென்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.  இரண்டாவது  டி20 போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

இதையடுத்து ரோஹித்தும் தவானும் களமிறங்கினர். இருவரும் விக்கெட்டை பறிகொடுக்காமல் நிதானமாக தொடங்கினர். பின்னர் அதிரடியாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 123 ரன்களை சேர்த்தது. தவான் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மூன்றாம் வரிசையில் இறங்கிய ரிஷப் பண்ட் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஆனால் ரோஹித் சர்மா மிரட்டலாக ஆடினார். தீபாவளி அன்று ரோஹித் சரவெடியாக வெடித்தார். பவுண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசினார் ரோஹித். ரோஹித்துடன் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராகுலும் சிறப்பாக ஆடினார். 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 61 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசினார். ரோஹித்தின் அதிரடி சதத்தால் 20 ஓவர் முடிவில் 195 ரன்களை குவித்தார்.

196 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹோப், ஹெட்மயர், டேரன் பிராவோ, பொல்லார்டு என அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரை வென்றது.