ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்ட நிலையில், ரோஹித் சர்மாவும் தோனியும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடிவருகின்றனர். பொறுப்புடன் ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 288 ரன்களை குவித்தது. 

289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேற, நான்காவது ஓவரில் கோலியும் ராயுடுவும் ரிச்சர்ட்ஸனின் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். 4 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 4வது ஓவரிலேயே களத்துக்கு வந்தார் தோனி. 

தினேஷ் கார்த்திக்கை நிறுத்துவிட்டு தோனி ஒருவரிசை முன்னதாக களமிறக்கப்பட்டார். தோனியும் ரோஹித்தும் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தோனி மிகவும் நிதானமாக ஆட, ரோஹித் சர்மா அவ்வப்போது சில சிக்ஸர்களை அடித்தார். 4வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தபோதிலும் சற்றும் அசராத ரோஹித் சர்மா, அடுத்த ஓவரிலேயே சிக்ஸர் விளாசினார். 13 ஓவர்கள் வரை இருவரும் மிகவும் மந்தமாக ஆடினர். பின்னர் சற்று அடிக்க ஆரம்பித்தனர். 

பீட்டர் சிடில் வீசிய 14வது ஓவரில் ரோஹித் சர்மா சிக்ஸர் விளாச, நாதன் லயன் வீசிய அடுத்த ஓவரில் தோனி தனது அக்மார்க் ஷாட்டின் மூலம் சிக்ஸர் விளாசினார். இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்துவருகின்றனர். அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதத்தை பூர்த்தி செய்தார். 

ரோஹித் சர்மாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தோனியும் சிறப்பாக ஆடிவருகிறார். ஸ்வீப் ஷாட், கவர் டிரைவ் என தோனி சில அருமையான ஷாட்களை ஆடினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் திணறிவருகின்றனர்.