தன்னை ஸ்லெட்ஜ் செய்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னிற்கு அவர் சொன்னதை செய்துகாட்டி பதிலடி கொடுத்துள்ளார் ரிஷப் பண்ட். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்டில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 1981ம் ஆண்டுக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து மெல்போர்னில் வென்று இந்திய அணி சாதனை படைத்தது. 

மெல்போர்ன் டெஸ்டில் இரு அணி வீரர்களும் கடுமையாக ஸ்லெட்ஜிங் செய்துகொண்டனர். மெல்போர்ன் டெஸ்டில் ரிஷப் பண்ட் பேட்டிங் ஆடியபோது, அவரை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் ஸ்லெட்ஜ் செய்தார். இந்த போட்டிக்கு இடையே இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டது. அதில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 

எனவே அதை சுட்டிக்காட்டி டிம் பெய்ன் கிண்டலடித்தார். ரிஷப் ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, தோனி ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். நீ கழட்டிவிடப்பட்டாய். எனவே உனக்கு வேற வேலையில்லை என்றால் பிக் பேஷ் டி20 லீக் போட்டிகளில் வந்து ஆடு என்று சீண்டினார். அத்துடன் நிறுத்தாமல் நானும் என் மனைவியும் சினிமாவுக்கு செல்லும்போது, என் குழந்தைகளை பார்த்துக்கொள் என்று சீண்டினார். 

டிம் பெய்னுக்கு அவர் பேட்டிங் ஆடும்போது ரிஷப் பண்ட் தக்க பதிலடி கொடுத்துவிட்டார். தற்காலிக கேப்டன் என்று டிம் பெய்னை விமர்சித்த ரிஷப் பண்ட், அவருக்கு பேச மட்டும்தான் தெரியும். அதனால் அவரை அவுட்டாக்க சிரமப்பட தேவையில்லை என்று கடுமையாக பதிலடி கொடுத்தார். 

அத்துடன் நிறுத்தாமல், மெல்போர்ன் டெஸ்ட் முடிந்த நிலையில், டிம் பெய்னின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ரிஷப் பண்ட் புகைப்படம் எடுத்துள்ளார். அதில் டிம் பெய்னின் ஒரு குழந்தையை ரிஷப்பும் மற்றொரு குழந்தையை பெய்னின் மனைவி போனி பெய்னும் தூக்கி வைத்துள்ளனர். பெய்ன் கிண்டலடித்திருந்தாலும், அவரது குடும்பத்தை ரிஷப் பண்ட் சந்தித்து குழந்தைகளை தூக்கி வைத்திருக்கும் அவரது செயல் அனைவரின் பாராட்டையும் குவித்து வருகிறது. இந்த புகைப்படத்தை பெய்னின் மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.