இளம் வீரர் ரிஷப் பண்ட், தனது 5வது டெஸ்ட் போட்டியில்தான் ஆடிவருகிறார். ஆனால் அதற்குள்ளாக தோனி செய்த சம்பவம் ஒன்றை சமன் செய்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, சிக்ஸருடன் தனது சர்வதேச ரன் கணக்கை தொடங்கிய ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். 

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மட்டுமே ஆடியது. ராஜ்கோட்டில் நடந்த அந்த போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அபாரமாக ஆடிய ரிஷப் பண்ட், 92 ரன்களில் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். 

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், சதத்தை எதிர்நோக்கியிருந்தார். ஆனால் குழப்பமான ஒரு ஷாட்டை ஆடி, அதே 92 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து இந்த முறையும் சதத்தை தவறவிட்டார். 

ஆனால் இரண்டு சதங்களையும் தவறவிட்டிருந்தாலும் இரண்டு புதிய மைல்கற்களை ரிஷப் பண்ட் எட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் மற்றும் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் ஆகிய மூன்று அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் அரைசதம் கடந்த ரிஷப் பண்ட், அடுத்தடுத்த மூன்று இன்னிங்ஸ்களில் அரைசதம் கடந்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனியுடன் பகிர்ந்துள்ளார். 

தோனி, இரண்டு முறை மூன்று அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் அரைசதம் கடந்துள்ளார். இந்த சம்பவத்தை செய்யும் தோனிக்கு அடுத்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.

அதேபோல மூன்று அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் 80 ரன்களுக்கும் மேல் எடுத்த விக்கெட் கீப்பர்களில், ஆலன் நாட், டெனிஸ் லிண்ட்ஸே, மாட் பிரையர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருடன் ரிஷப் பண்ட்டும் இணைந்துள்ளார்.