இந்திய ஒருநாள் அணியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடிவருகிறது. டி20 தொடர் முடிந்து, டெஸ்ட் தொடரிலும் 2 போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளும் முடிந்ததும் ஒருநாள் தொடரில் ஆடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும் அதன்பிறகு நியூசிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி ஆட உள்ளது. 

அதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு தொடர்களுக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படவில்லை. உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி இந்த 8 போட்டிகளில் மட்டுமே ஆட உள்ளதால், இது உலக கோப்பைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த தொடர்களில் இடம்பெற்றுள்ள வீரர்கள் தான் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவர். 

அந்த வகையில் உலக கோப்பையை மனதில் கொண்டு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து தொடரில் அறிமுகமான ரிஷப் பண்ட், அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் இடம்பெற்றார். ஒருநாள் அணியிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் சூழலை உணர்ந்து அதற்கேற்றவாறு பேட்டிங் ஆடவில்லை. எப்போதுமே ஒரே மாதிரியான அதிரடி ஆட்டம் என்பது வேலைக்கு ஆகாது. ஒருநாள் போட்டிகளை பொறுத்தமட்டில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் பொறுப்புடன் ஆட வேண்டும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பண்ட் அதை செய்ய தவறிவிட்டார். அதனால் தேர்வாளர்களையும் அணி நிர்வாகத்தையும் அவர் கவராததால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதை பயன்படுத்த தவறிய பண்ட், தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் அணியில் இடத்தை பிடித்து கொடுத்துள்ளார். இந்த தொடர்களுக்கான அணியில் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டிருப்பதால், உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இருக்க மாட்டார். இந்திய அணியில் வேகமாக வளர்ந்து அனைத்து வகையான போட்டிகளிலும் இளம் வயதிலேயே இடத்தை பிடித்த ரிஷப், உலக கோப்பையில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே தனது முதிர்ச்சியற்ற ஆட்டத்தால் தனக்கு சூனியம் வைத்துக்கொண்டார். 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் 5ம் வரிசை வீரராக தினேஷ் கார்த்திக்கோ அல்லது கேதர் ஜாதவோ களமிறக்கப்படலாம்.