இந்திய அனியில் நிலவும் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முடிவு காணும் முனைப்பில் இந்திய அணி இருந்தது. அதற்கேற்ப அணி தேர்வும் செய்யப்பட்டது. ஆனால் இந்திய அணியின் முயற்சியில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுவிட்டது. 

இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை நிலவிவருகிறது. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளதால், அதற்குள்ளாக மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வு காணும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. நான்கு மற்றும் ஆறாவது வரிசை வீரர்களை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 

நான்காவது வரிசையில் ராயுடு சிறப்பாக ஆடிவருவதால், அந்த இடத்திற்கான பிரச்னை ஓரளவிற்கு தீர்ந்துள்ளது. தொடர்ந்து அவர் சிறப்பாக ஆடும்பட்சத்தில் அந்த இடத்தில் அவர் தான் என்பது உறுதியாகிவிடும். இப்போதே அந்த இடத்திற்கு அவர் தான் என்பது உறுதியாகிவிட்ட போதும், இன்னும் சில போட்டிகளில் அவர் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். 

தோனி ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். ஆனால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார். எனினும் அவர் செய்துவந்த ஃபினிஷிங் பணியை செவ்வனே செய்ய அந்த இடத்திற்கு ஒரு வீரர் தேவை. தோனி ஐந்தாவது இடத்தில் இறங்கினால் ஆறாவது இடத்தில் இறங்கவும், தோனி ஆறாவது இடத்தில் ஐந்தாவது இடத்தில் இறங்கவும் ஒரு வீரர் தேவை. எனவே அந்த இடத்தை ரிஷப் பண்ட்டை வைத்து பூர்த்தி செய்ய அணி நிர்வாகம் முடிவெடுத்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காத ரிஷப் பண்ட்டிற்கு இரண்டாவது போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்தது. எனினும் அவர் சோபிக்கவில்லை. பதின் ரன்களில் வெளியேறினார். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கின் போது, சாஹல் வீசிய 36வது ஓவரில் ரோமன் பவல் ஸ்டிரைட் திசையில் தூக்கி அடித்த பந்தை லாங் ஆன் திசையில் இருந்து ஓடிவந்து பிடிக்க முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து பவுண்டரில் லைனில் இருந்த போர்டில் மோதி காயமடைந்தார். கைவிரல்கள் மற்றும் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் ஆட்டத்தில் பாதியில் களத்திலிருந்து வெளியேறினார். 

அவரது காயம் குறித்த அப்டேட் இதுவரை செய்யப்படவில்லை. எனினும் அந்த காயம் பெரிதாக இருக்கும்பட்சத்தில் அவர், மூன்றாவது போட்டியில் மட்டுமோ அல்லது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்தோ நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் கடைசி மூன்று போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ரிஷப் பண்ட்டின் பெயரும் உள்ளது. எனவே ரிஷப் பண்ட் ஆடுவாரா? மாட்டாரா? என்பது விரைவில் தெரியவரும். ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானதுமே அடுத்த போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுமளவிற்கான காயம் ஏற்பட்டிருப்பது வருத்தத்திற்குரிய விஷயம்தான்.