இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ராகுலும் ரிஷப் பண்ட்டும் சேர்ந்து இங்கிலாந்து அணியை மிரட்டிவிட்டனர். ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார். 149 ரன்களில் ராகுல் அவுட்டானார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுவிட்ட நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் கடைசி போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

தொடரை இழந்த இந்திய அணி, கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களும் இந்திய அணி 292 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் குக் மற்றும் ரூட் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடிக்க, அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 423 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

464 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ஷிகர் தவான், புஜாரா, கோலி ஆகிய மூவரும் அடுத்தடுத்து வெளியேற 2 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு சென்றது இந்திய அணி. இப்படியொரு கடும் இக்கட்டான நிலையிலிருந்து ராகுல் - ரஹானே ஜோடி இந்திய அணியை மீட்டெடுத்தது. ராகுல் - ரஹானே ஜோடி, அதள பாதாளத்தில் இருந்த இந்திய அணியை மீட்டெடுத்தது. 

4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்களை சேர்த்தது. 106 பந்துகளை சந்தித்து 37 ரன்கள் எடுத்த ரஹானே மொயின் அலியின் பந்தை அடித்து ஆட நினைத்து ஜென்னிங்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி, பென் ஸ்டோக்ஸின் பந்தில் டக் அவுட்டானார். 

இதையடுத்து ராகுலுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். 89 ரன்களில் இருந்த ராகுல் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி சதம் அடித்தார். இந்த தொடர் முழுவதும் எந்த இன்னிங்ஸிலும் சரியாக ஆடாத ராகுல், இந்த இன்னிங்ஸில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தை தொடர்ந்த ராகுல்-பண்ட், தெளிவான, அதேநேரத்தில் அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தனர். விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடியதுடன் ரன்குவிப்பிலும் கவனம் செலுத்தினர். ஆண்டர்சன், பிராட், அடில் ரஷீத், மொயின் அலி, ஸ்டோக்ஸ் என அனைவருமே மாறி மாறி பவுலிங் வீசியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட், சிக்ஸர் அடித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

இருவரும் அணியை வெற்றி பெறச்செய்யும் நோக்கில் அதிரடியாக ஆடினர். 149 ரன்களில் ராகுல் ரஷீத்தின் பந்தில் அவுட்டானார். இதையடுத்து பண்ட்டுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.