rishabh pant got orange cap from ambati rayudu

நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசனில், இந்திய இளம் வீரர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் அதிகமான ரன்களில் முதலிடத்தில் இருக்கும் வீரருக்கு ஆரஞ்சு தொப்பியும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் வீரருக்கு நீலநிற தொப்பியும் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஐபிஎல் தொடரில் அம்பாதி ராயுடு, கேன் வில்லியம்சன், விராட் கோலி உள்ளிட்டோரிடையே ஆரஞ்சு தொப்பி மாறி மாறி வலம் வந்தது.

நேற்றைய ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், அதிரடியாக ஆடி 29 பந்துகளுக்கு 69 ரன்கள் குவித்ததன் மூலம், அதிக ரன்களில் முதலிடத்தை பிடித்தார் ரிஷப் பண்ட். 

இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து அம்பாதி ராயுடு சிறப்பாக ஆடிவருகிறார். நல்ல ஃபார்மில் இருப்பதால் ஆட்டத்திற்கு ஆட்டம் ரன்களை குவித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே அவரிடம் தான் ஆரஞ்சு தொப்பி இருந்தது. 8 போட்டிகளில் 370 ரன்கள் அடித்திருந்த அவரிடமிருந்து ரிஷப் பண்ட் ஆரஞ்சு தொப்பியை பறித்துவிட்டார்.

இதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ள ரிஷப் பண்ட், 375 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிவிட்டார். கடந்த இரண்டு போட்டிகளில் மட்டும் 148 ரன்களை குவித்துள்ளார் பண்ட். 3 அரைசதங்களுடன் 375 ரன்கள் குவித்துள்ளார்.

அம்பாதி ராயுடுவை விட ரிஷப் பண்ட் 5 ரன்கள் மட்டுமே அதிகமாக எடுத்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிராக இன்று சென்னை ஆட இருப்பதால், இன்றைய போட்டியில் 6 ரன்கள் அடித்தாலே ஆரஞ்சு தொப்பி அம்பாதி ராயுடுவிடம் சென்றுவிடும்.