இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ஆடி கவனத்தை ஈர்த்தார். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்ற ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. 

ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங்கில் சில குறைபாடுகள் இருந்தாலும் பேட்டிங்கை பொறுத்தவரை தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். பின்வரிசையில் இறங்கி அடித்து ஆடி, ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய ரிஷப் பண்ட்டை தோனியுடனும் ஆடம் கில்கிறிஸ்ட்டுடனும் ஒப்பிடுகின்றனர். கவாஸ்கர், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ரிஷப்பை கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிட்டுள்ளனர். 

இந்நிலையில், தோனி மற்றும் கில்கிறிஸ்ட் ஆகியோருடனான ஒப்பீடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிஷப் பண்ட், தோனி, கில்கிறிஸ்ட் ஆகியோர் எல்லாம் எனது முன்னோடிகள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஆனால் அவர்களை காப்பி அடிக்கவோ அவர்களாகவோ நான் விரும்பவில்லை. நான் அடுத்த தோனியாகவோ கில்கிறிஸ்ட்டாகவோ விரும்பவில்லை. நான் நானாக இருக்கத்தான் விரும்புகிறேன் என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.