இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவிக்கப்போகும் வீரர் யார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடராகும். வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக தோற்றுவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது. அதேபோல ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவிவரும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை வீழ்த்தி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சரிவிலிருந்து மீண்டெழும் முனைப்பில் உள்ளது. இவ்வாறு இரு அணிகளுக்குமே இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த தொடரில் கண்டிப்பாக முக்கிய பங்காற்றுவார். அவர் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வீரராக திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை. நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் கோலி.

கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்தபோது கோலி சிறப்பாக ஆடினார். அந்த தொடரில் 4 சதங்கள் உட்பட 692 ரன்களை குவித்தார். அதைவிட தற்போது மேலும் அவரது ஆட்டம் முதிர்ச்சியடைந்துள்ளதாலும் நல்ல ஃபார்மில் இருப்பதாலும் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. 

ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணியில் இல்லாததால், விராட் கோலிதான் இந்த தொடரில் அதிக ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்றுக்கு பாண்டிங் அளித்த பேட்டியில், கோலி நன்றாக ஆடக்கூடியவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியாவில் சிறப்பாக பேட் செய்து பல சாதனைகளை செய்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்தலாக இருக்கமாட்டார்கள் என்றே கருதுகிறேன். அப்படியே இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் சூழலுக்கு ஏற்றாற்போல் சிறப்பாக ஆடக்கூடியவர் கவாஜா. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிகமான ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதை அவர்தான் வாங்குவார். கோலி வாங்கமாட்டார். கோலியை கவாஜா தோற்கடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.