Ricky Ponting appointed Australia assistant coach
இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் துணைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது டாரென் லேமன் உள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக டிராய் கூலேவும், மற்றொரு பயிற்சியாளராக மாத்யூ மாட்டும் உள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த ரிக்கி பாண்டிங் கடந்த 2005-ஆம் ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2007 மற்றும் 2009-ஆம் ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி அவரது தலைமையில் விளையாடியது.
துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ரிக்கி பாண்டிங், "டாரென், டிராய், மாத்யூ ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
முத்தரப்பு டி-20 தொடர் ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங்குகிறது என்பதும் முதலாவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
