சிட்னி டெஸ்ட்டில் கழட்டி விடப்படும் ரோகித் சர்மா?; ஓடிஐயிலும் ஓய்வு பெற முடிவு? புதிய தகவல்கள்!
சிட்னி டெஸ்ட்டில் ரோகித் சர்மா இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல் ஓடிஐ கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வுபெற இருப்பதாக கூறப்படுகிறது.
ரோகித் சர்மா மீது விமர்சனம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்தியா, 2 டெஸ்ட்களில் படுதோல்வியை சந்தித்தது. ஒரு போட்டியில் மழையால் தோல்வியில் இருந்து தப்பியது. தொடர் தோல்வியால் இந்திய அணி வீரர்கள் மீதும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மிகவும் முக்கியமாக இந்த தொடரில் சொதப்பி வரும் ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அதுவும் படுமோசாமாக பேட்டிங் செய்து வரும் ரோகித் சர்மா இந்த தொடரில் மொத்தமே 31 ரன்கள் தான் எடுத்துள்ளார். கடைசியாக விளையாடிய ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் ரோகித்தின் பேட்டிங் சராசரி 10.93 மட்டுமே.
சிட்னி டெஸ்ட்டில் கழட்டி விட முடிவு
மேலும் இந்த தொடர் முழுவதும் சரியான பீல்டிங் செட் செய்யவில்லை, சரியாக பவுலர்களை ரொட்டேட் செய்யவில்லை என்று ரோகித் சர்மாவின் கேப்டன்சி மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டியில் ரோகித் சர்மாவை அணியில் இருந்து கழற்றிவிட்டு பும்ராவை மீண்டும் கேப்டனாக நியமிக்க பயிற்சியாளர் கம்பீர் மற்றும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரோகித் சர்மா பேட்டிங் மட்டுமின்றி கேப்டன்சியிலும் சொதப்புவதால் அவருக்கு கடைசி டெஸ்ட்டில் ஓய்வளிக்க முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், இது தொடர்பாக ரோகித்திடமே தகவல் தெரிவித்து விட்டதாகவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் மெல்போர்னில் நடந்த 4வது டெஸ்ட்டே ரோகித் சர்மாவின் கடைசி டெஸ்ட் என கூறப்படுகிறது.
ஓடிஐயிலும் ஓய்வு பெற முடிவு
அப்படியே கடைசி டெஸ்ட்டில் ரோகித் சர்மா இடம்பெற்றாலும் அதுவே அவரது கடைசி டெஸ்ட்டாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. சிட்னி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு சென்றாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஜூன் மாதம் தான் நடைபெறும். இதேபோல் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு எதிராக ஜுன் மாதத்துக்கு பிறகு தான் நடைபெற உள்ளது.
இந்த இரண்டுக்கும் இன்னும் 6 மாதங்கள் இருப்பதால் அதற்குள் ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித், அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.