ஆஸ்திரேலிய அணி 43 ஓவர் வரை 208 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி 7 ஓவர்களில் 80 ரன்களை குவித்தது. அதிலும் புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்கள் அடிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 288 ரன்களை குவித்தது. 289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 4 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பின்னர் ரோஹித்தும் தோனியும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதிரடியாக ஆட தொடங்க வேண்டிய நேரத்தில் தோனி 51 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு தினேஷ் கார்த்திக், ஜடேஜா ஆகியோர் வெளியேற ஆட்டம் கை மீறிப்போனது. ரோஹித் சர்மா களத்தில் இருந்தாலும் வெல்ல முடியாத சூழல் உருவானது. இந்திய அணி 254 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய அணியின் தோல்விக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அந்த இரண்டுமே, 34 ரன்களை சார்ந்ததுதான். ஆஸ்திரேலிய அணி அடித்திருக்க வேண்டிய ஸ்கோரை விட 20 முதல் 25 ரன்கள் அதிகமாக சேர்த்தது. அந்த அணி 43 ஓவர் வரை 208 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. கடைசி 7 ஓவர்களில் 80 ரன்களை குவித்தது. அதிலும் புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்கள் அடிக்கப்பட்டது. இந்த கடைசி 7 ஓவர்கள் தான் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக அமைந்துவிட்டது. கடைசி ஓவர்களில் கட்டுப்படுத்தியிருந்தால் இலக்கு குறைந்திருக்கும்.
மற்றொரு காரணம், தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டதால் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் அதிகமான பந்துகளை விழுங்கினார் தோனி. ரோஹித்துடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்த பிறகு அவரும் அரைசதம் கடந்த பிறகு, அடித்து ஆடி வீணான பந்துகளை ஈடுகட்ட ஆரம்பிக்கும்போதே விக்கெட்டை இழந்துவிட்டார். அதுவும் அது அவுட்டே இல்லை. ரிவியூ இல்லாததால் தோனி வெளியேற வேண்டியதாயிற்று. 96 பந்துகளில் 51 ரன்களை அடித்தார் தோனி. தோனி அவுட்டாகாமல் இருந்திருந்தால் ஓரளவிற்கு இந்த இடைவெளியை ஈடுகட்டியிருப்பார். ஏனென்றால் களத்தில் நிலைத்து சூழலை நன்கு அறிந்த தோனி அடித்து ஆடுவது எளிது. ஆனால் புதிதாக களத்திற்கு வந்த வீரர் உடனடியாக அடித்து ஆடுவது சற்று கடினம். தோனி ஆடிய பந்துக்கும் அடித்த ரன்னுக்கும் இடையேயான இடைவெளியும் கடைசி நேரத்தில் நெருக்கடியை அதிகரித்தது. ஆனால் தோனி ஆடிய இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தோனியின் விக்கெட் விழாமல் இருந்திருந்தால் ஆட்டம் நமக்கு சாதகமாக இருந்திருக்கும்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 13, 2019, 10:28 AM IST