தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அதற்கு உடந்தையாக இருந்த கேப்டன் ஸ்மித், ஐடியா கொடுத்த துணை கேப்டன் வார்னர் ஆகியோர் அவரவர் வகித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஏற்கனவே களத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாகியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நம்பகத்தன்மை மீதே சந்தேகத்தை எழுப்பியதால், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறிழைக்கப்படாத அளவிற்கு முன்னுதாரணமாக இருக்கும் வகையில் தண்டனை விதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

எனவே ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் சர்ச்சைக்குரிய பயிற்சியாளராக இருந்த லீமென் மீது மட்டும் நடவடிக்கைகள் பாயவில்லை. அதற்கான காரணம் வெளிவந்துள்ளது. அணியினரை தவறாக வழிநடத்துவதாக லீமென் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களே லீமெனை குற்றம்சாட்டினர். 

களத்தில் வீரர்களின் அத்துமீறிய செயல்களுக்கும் ஒழுங்கீன செயல்களுக்கும் ஒரு வகையில் கேப்டனும் பயிற்சியாளரும் காரணம் தான். அந்தவகையில், ஆஸ்திரேலிய வீரர்களை லீமென் வழிநடத்தும் முறை சர்ச்சையாகவே நீடிக்கிறது.

பயிற்சியாளர் லீமெனுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் லீமெனும் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் எழுந்ததும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் சதர்லேண்ட், தென்னாப்பிரிக்கா சென்று விசாரணை நடத்தினார். லீமெனிடம் விசாரித்தபோது, பந்தை சேதப்படுத்த வகுக்கப்பட்டிருந்த திட்டம் லீமெனுக்கு தெரியாது என்பது தெரியவந்துள்ளது. அதனால் தான் லீமென் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. 

ஆனால் களத்தில் வீரர்களின் நடத்தை குறித்தும் அவற்றில் லீமெனின் பங்கு குறித்தும் அவரிடம் மீண்டும் விரிவான விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.