Real Madrid won the championship for the 2nd time

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் அணியைத் தோற்கடித்து தொடர்ந்து இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி கார்டிஃப் நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரியல் மாட்ரிட் அணி, ரொனால்டோ மூலம் 20-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது.

அடுத்த 7-ஆவது நிமிடத்தில் ஜுவென்டஸ் வீரர் மரியோ மான்ட்சூகிச் கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது.

இதன்பிறகு முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழாத நிலையில், பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 61-ஆவது நிமிடத்தில் கேஸ்மீரோ கோலடிக்க, 64-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் கோலடித்தார். இதனால் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதனிடையே 83-ஆவது நிமிடத்தில் ஜுவென்டஸ் வீரர் ஜுவான் குயாட்ராடோ, மாட்ரிட் வீரர் செர்ஜியோ ரேமோஸுடன் மோதலில் ஈடுபட்டதன் காரணமாக 2-ஆவது முறையாக மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டார்.

ஒரே ஆட்டத்தில் 2-ஆவது முறையாக மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்படும்பட்சத்தில் அது ரெட் கார்டாக கணக்கில் கொள்ளப்படும். அதனால் குயாட்ராடோ போட்டியிலிருந்து வெளியேற நேர்ந்தது.

இதையடுத்து ஜுவென்டஸ் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மாட்ரிட் அணியின் மாற்று ஆட்டக்காரர் மார்கோ ஆஸன்ஸியோ கடைசி நிமிடத்தில் கோலடிக்க, ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டûஸ தோற்கடித்து சாம்பியன் ஆனது.

1958-க்குப் பிறகு இப்போதுதான் ஒரே சீசனில் ஸ்பெயின் லீக், சாம்பியன்ஸ் லீக் ஆகிய இரண்டிலும் கோப்பையை வென்றுள்ளது ரியல் மாட்ரிட்.