பெங்களூரு அணி தோற்றாலும்கூட, ஸ்பார்ன்சர்ஷிப் மற்றும் ரசிகர்களின் ஆதரவால் முதலீட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், லாபம் சம்பாதித்துவிட்டதாக அந்த அணியின் உரிமையாளர் அம்ரித் தாமஸ் தெரிவித்துள்ளார்.

11 ஐபிஎல் சீசன்களில் இதுவரை ஒருமுறை கூட பெங்களூரு அணி கோப்பையை வென்றதில்லை. ஐபிஎல் தொடங்கியபோது பெங்களூரு அணியை தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கினார். நிதி மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு மல்லையா தப்பிச் சென்றுவிட்டார். அதன்பிறகு பெங்களூரு அணி கைமாறியது. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் இங்கிலாந்து கம்பெனி ஒன்றும் இணைந்து பெங்களூரு அணியை வாங்கியது.

2018ம் ஆண்டு ஐபிஎல்லிலும் பெங்களூரு அணியின் கோப்பை கனவு கனவாகவே போயிற்று. அந்த அணி பிளே ஆஃபிற்கே தகுதி பெறவில்லை. எனினும் அந்த அணியின் உரிமையாளர்கள் ஸ்பார்ன்சர்ஷிப் மற்றும் ரசிகர்களின் பேராதரவுடன் லாபம் பார்த்துவிட்டனர். அதை அந்த அணியின் உரிமையாளரே கூறியுள்ளார். பெங்களூரு அணி தோற்றாலும் லாபத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. 

போட்டியில் வெல்வதும் தோற்பதும் கிரிக்கெட் தொடர்பான விஷயம். இந்த சீசனில் குறிப்பிடத்தகுந்த லாபம் கிடைத்துள்ளது. Eros Now, Dominos, HP ஆகிய நிறுவனங்களின் ஸ்பான்சர் மற்றும் போட்டியை காண அதிகமான ரசிகர்கள் வந்ததால் டிக்கெட் மூலமான வருமானம் என தொழில் ரீதியாக பெங்களூரு அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஹெட் மற்றும் பெங்களூரு அணியின் உரிமையாளருமான அம்ரித் தாமஸ் தெரிவித்துள்ளார்.