இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 288 ரன்களை குவித்தது. 289 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 254 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின் போது, 10 ஓவருக்கு உள்ளாகவே 2 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. அதன்பிறகு கவாஜாவுடன் ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியின் பவுலிங்கை நிதானமாக கையாண்டதோடு ரன்களையும் சேர்த்தது. ஜடேஜாவும் குல்தீப்பும் மாறி மாறி வீச, கவாஜாவும் ஷான் மார்ஷும் அவர்களை திறமையாக எதிர்கொண்டு ஆடினர். இதையடுத்து பரிசோதனை முயற்சியாக அம்பாதி ராயுடுவை பந்துவீச அழைத்தார் கேப்டன் கோலி.

22வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய ராயுடு, அந்த ஓவரை நன்றாக வீசினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதன்பிறகு ராயுடு வீசிய 24வது ஓவரில் கவாஜா 2 பவுண்டரிகளை அடித்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டன. இரண்டு ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்தார் ராயுடு. அதன்பிறகு ராயுடுவை பந்துவீச அழைக்கவில்லை கோலி.

நேற்றைய போட்டியில், புவனேஷ்வர் குமார், ஷமி, கலீல், குல்தீப், ஜடேஜா ஆகிய 5 பேர் மட்டுமே பவுலர்கள். பார்ட் டைம் பவுலர்கள் இல்லாததால் ராயுடுவை பயன்படுத்தினார் கோலி. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு ராயுடுவின் பவுலிங் ஆக்‌ஷன் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. அவரது பவுலிங் முறையாக இல்லை என புகார் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 14 நாட்களுக்குள் அவரது பவுலிங் ஆக்‌ஷன் சோதிக்கப்படும். அவரது பவுலிங் முறையானது என்ற பட்சத்தில் அவர் தொடர்ந்து பந்துவீசமுடியும். இல்லையென்றால் வீச முடியாது. இந்திய அணியில் வேறு எந்த பேட்ஸ்மேனுக்கும் பந்துவீச தெரியாது என்பது இந்திய அணியின் பலவீனம்தான்.