ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவருக்கு 288 ரன்களை குவித்தது. 289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 254 ரன்களுக்கே ஆல் அவுட்டானதால் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணியின் தவான், கோலி, ராயுடு ஆகிய மூன்று விக்கெட்டுகளை 4 ஓவருக்கு உள்ளாகவே வீழ்த்திவிட்டனர் ஆஸ்திரேலிய பவுலர்கள். அதன்பிறகு ரோஹித்தும் தோனியும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் கடந்து, அடித்து ஆட தொடங்கிய நேரத்தில் தோனி ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணியின் அறிமுக பவுலர் பெஹ்ரெண்டோர்ஃப் பவுலிங்கில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். 

 அரைசதம் அடிக்க 90 பந்துகளுக்கும் அதிகமாக எடுத்துக்கொண்ட தோனி, அதிரடியாக ஆடி அவற்றை ஈடுகட்டுவதற்குள்ளாகவே அவுட்டாகிவிட்டார். தோனி அவுட்டான பந்து, இடது கை பவுலரான பெஹ்ரெண்டோர்ஃப் வீசப்பட்ட பந்து. அந்த பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது. அதனால் அது அவுட் இல்லை. ஆனால் அம்பயர் அவுட் கொடுத்துவிட்டார். தோனி ரிவியூ கேட்டிருந்தால் தப்பியிருப்பார். ஆனால் ஒரே ஒரு ரிவியூவையும் ராயுடு ஆரம்பத்திலேயே வீணடித்து விட்டதால் தோனி வெளியேற வேண்டியதாயிற்று. 

தோனியின் விக்கெட்டுக்கு பிறகுதான் ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் பக்கம் திரும்பியது. அதன்பிறகு ரோஹித் களத்தில் நின்று அடித்து ஆடினாலும், நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிய நேரத்தில் பார்ட்னரை இழப்பது என்பது ஆட்டத்தில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அந்த சோக சம்பவம்தான் நடந்துவிட்டது. முக்கியமான நேரத்தில் தோனி அவுட்டானதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை.