இந்திய அணியில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஸ்பின் ஜோடி நீக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவருமே ஆடிவருகின்றனர். 

அனுபவம் வாய்ந்த ஆஃப் ஸ்பின்னர்களான அஷ்வினும் ஜடேஜாவும் தோனி கேப்டனாக இருக்கும்போது கோலோச்சினர். ஆனால் கோலி கேப்டனானதும் ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல் மற்றும் குல்தீப்பிற்கு முன்னுரிமை அளித்தார். அவர்களும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணியில் தங்களை தக்கவைத்துக்கொண்டனர். 

அதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் அஷ்வினும் ஜடேஜாவும் தவித்துவந்தனர். ஆல்ரவுண்டர் என்ற முறையில் ஜடேஜா அணியில் இடம்பெற்றார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார். ஆனால் அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரான அஷ்வினுக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை. 

இதற்கிடையே தியோதர் டிராபியில் ஆடிவரும் அஷ்வின், பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் அஷ்வின் இல்லையென்றாலும் டெஸ்ட் அணியின் நிரந்தர ஸ்பின்னராக அஷ்வின் தான் உள்ளார். 

இந்நிலையில், தனது பந்துவீசும் முறை, அனுபவம் மற்றும் குல்தீப் என பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அஷ்வின். அப்போது பேசிய அஷ்வின், நன்றாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினால் பந்துவீச்சும் உத்தியும் நன்றாக இருக்கிறது என்பார்கள். அதே விக்கெட்டுகளை வீழ்த்த முடியாவிட்டால் விமர்சிப்பார்கள். நான் பல வகையான பந்துகளை வீசுகிறேன் என்கிறார்கள். ஆனால் நான் அப்படியெல்லாம் நினைத்து பந்துவீசவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இவையெல்லாமே மக்களால் உருவாக்கப்படும் கருத்துகள். ஆனால் அவற்றிற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. நான் என் ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்றார் அஷ்வின். 

நான் எனக்கென ஒரு இலக்கை உருவாக்கிக்கொண்டு அதை நோக்கி செல்கிறேன். ஆனால் வெளியில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. அதை தெரிந்துகொள்ளவும் விரும்பமாட்டார்கள். நானும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. இப்போதும் டெஸ்ட் போட்டிகளில், போட்டிக்கு 5 முதல் 6 விக்கெட்டுகளை வீழ்த்திவிடுகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இப்போது நன்கு முதிர்ச்சியடைந்திருக்கிறேன் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார். 

குல்தீப் யாதவ் குறித்து பேசிய அஷ்வின், குல்தீப் லெக் ஸ்பின், கூக்ளி ஆகிய பந்துகளை அருமையாக வீசுகிறார். பேட்ஸ்மேன்களை ஏமாற்றும் திறமையை பெற்றிருக்கிறார் குல்தீப். ஆனால் பேட்ஸ்மேன்கள் குல்தீப்பை கணிக்கத் தொடங்கியபிறகுதான் அவருக்கு பிரச்னைகளும் சிக்கலும் தொடங்கும் என அஷ்வின் எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.