ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது. கேப்டன் கோலிக்கு ஆசிய கோப்பையில் ஓய்வு அளிக்கப்பட்டதால் கேப்டன் பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, அணியை சிறப்பாக வழிநடத்தி நன்றாக கேப்டன்சி செய்கிறார் என்ற பாராட்டை பல முன்னாள் ஜாம்பவான்களிடமிருந்து பெற்றார்.
ஏற்கனவே விராட் கோலியின் கேப்டன்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. பவுலர்களை பயன்படுத்தும் விதம், ஃபீல்டிங் செட்டப், கள வியூகம் ஆகியவற்றில் பல குறைபாடுகள் உள்ளன. கோலியின் கேப்டன்சி பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கிடைத்த வாய்ப்பை மீண்டுமொரு முறை சிறப்பாக பயன்படுத்தி தன்னை ஒரு கேப்டனாக மீண்டும் நிரூபித்துள்ளார் ரோஹித் சர்மா.

ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் இதுவரை எந்த தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை. இலங்கைக்கு எதிரான தொடர், நிதாஹஸ் டிராபி ஆகியவற்றை ரோஹித் தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்நிலையில் தற்போது மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஆசிய கோப்பை தொடரையும் ரோஹித் தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.
ரோஹித் சர்மா களத்தில் சில நேரங்களில் சாதுர்யமாக நடந்துகொள்வது, பவுலர்களை பயன்படுத்தும் விதம், கள வியூகம், வீரர்களை கையாள்வது என அனைத்திலுமே கோலியை விட சிறப்பாகவே செயல்படுகிறார். ரோஹித் சர்மாவின் கேப்டன்சி சிறப்பாக இருப்பதால், இந்திய அணியின் கேப்டன்சியை யார் மேற்கொள்வது என்ற விவாதம் எழ தொடங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பைக்குள் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்திய அணி நிர்வாகமும் பிசிசிஐயும் உள்ளது. போகிறபோக்கில் அதற்கு முன்னதாக கேப்டனே மாறிவிடுவார் போலும்.
இதற்கிடையே இந்திய அணியின் நிரந்தர கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்தால் கேப்டனாக பொறுப்பேற்று அணியை சிறப்பாக வழிநடத்த தயார் என ரோஹித் சர்மா பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
கோலியுடன் மிகவும் நெருக்கமான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே, ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் கவர்ந்திழுக்கப்பட்டுள்ளார். ரோஹித்தின் அமைதியான, நிதானமான மற்றும் தீவிரமான கேப்டன்சியை வியந்து பாராட்டியுள்ளார்.

இக்கட்டான நேரங்களில் ரோஹித் சர்மா டென்ஷனாகாமல் சூழலை நிதானமாக கையாண்டு, வீரர்களை முறையாக வழிநடத்தி, கைமீறி போகும் போட்டிகளில் மீண்டும் போட்டிக்குள் அணியை கொண்டுவந்து விடுகிறார் ரோஹித். ரோஹித்தின் அணுகுமுறை பாராட்டுகளை குவித்து வருகிறது.
ஹாங்காங்கிற்கு எதிரான போட்டி, வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டி ஆகியவற்றில் எதிரணி தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியபோதும், மீண்டும் இந்திய அணியை போட்டிக்குள் கொண்டுவந்து வெற்றியை பெற வைத்திருக்கிறார்.

இந்நிலையில், ரோஹித்தின் கேப்டன்சி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா மிகவும் அமைதியாகவும் நிதானமாகவும் சூழல்களை கையாள்கிறார். வங்கதேச அணி அபாரமான தொடக்கத்தை அமைத்த போதிலும் தீவிரமாக செயல்பட்டு இந்திய அணியை போட்டிக்குள் கொண்டுவந்தார். கேப்டன்சியின் எல்லா அம்சங்களிலும் கூலாகவே இருக்கிறார் என ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
