ரித்திமான் சஹா காயத்திலிருந்து குணமடைந்து முழு உடற்தகுதியுடன் மீண்டும் திரும்பினால், இந்திய அணியில் டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்டின் நிலை குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கமளித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக ரித்திமான் சஹா சிறப்பாக செயல்பட்டுவந்தார். மிகச்சிறந்த விக்கெட் கீப்பரான சஹா, பல தருணங்களில் அபாரமாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கிலும் ஓரளவிற்கு சிறப்பான பங்களிப்பை செய்துவந்தார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த சஹா, அதன்பிறகு சிகிச்சை பெற்றுவந்தார். ஐபிஎல்லில் ஆடியதால் மீண்டும் காயம் பெரிதானது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருக்கிறார்.

அதனால் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், இங்கிலாந்து டெஸ்ட் தொடர், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர் என எதிலுமே அவர் ஆடவில்லை. இந்த காலக்கட்டத்தில் இந்திய டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பர் தேடுதல் நடந்தது. அந்தவகையில், பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக் ஆகிய சீனியர் விக்கெட் கீப்பர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இதையடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு, இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அணியில் ஆடும் வாய்ப்பை பெற்றார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், அவர் ஆடிய இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 92 ரன்கள் குவித்து இரண்டு முறையுமே சதத்தை தவறவிட்டார். 

விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார். அவரது விக்கெட் கீப்பிங் உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும், விக்கெட் கீப்பிங்கில் மேலும் பயிற்சிகளை மேற்கொண்டு வளர வேண்டும் என்ற ஆலோசனைகளை முன்னாள் விக்கெட் கீப்பர்கள் வழங்கிவருகின்றனர். எனினும் இவை ஒருபுறமிருக்க இந்திய அணியில் அவருக்கான இடத்தை பிடித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பிறகு பேசியுள்ள அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சஹா வந்துவிட்டால் அணியில் ரிஷப் பண்ட்டின் நிலை என்ன என்பது குறித்து விளக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய சாஸ்திரி, பண்ட் அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடியுள்ளார். சஹா திரும்பி வந்தாலும் நடப்பு ஃபார்மே அணியில் இடத்தை தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சஹா திரும்பி வந்தாலும், ரிஷப் பண்ட்டின் இடத்திற்கு ஆபத்து இல்லை என்பதை சாஸ்திரியின் கூற்று வெளிப்படுத்துகிறது.