தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லாமல் அர்ப்பணிப்புடன் கிரிக்கெட் ஆடிய ரஷீத் கானின் செயல், ஆஸ்திரேலிய ரசிகர்களை மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு ரஷீத் கானின் மீதான மரியாதையை அதிகப்படுத்தியுள்ளது. 

சமகால கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டராக திகழ்கிறார் ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான். ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 ஆல்ரவுண்டராக ரஷீத் கான். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டில் அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 

ஐபிஎல், பிக் பேஷ் லீக், கனடா பிரீமியர் லீக், ஆஃப்கான் பிரீமியர் லீக் என உலகம் முழுதும் நடக்கும் அனைத்து டி20 லீக் தொடர்களிலும் ரஷீத் கான் ஆடிவருகிறார். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிவரும் ரஷீத் கான், அந்த அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார். 

தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பேஷ் டி20 லீக் தொடரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக ரஷீத் கான் ஆடிவருகிறார். கடந்த டிசம்பர் 30ம் தேதி ரஷீத் கானின் தந்தை இறந்துவிட்டார். அந்த செய்தி ரஷீத் கானுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே ரஷீத் கான் அவரது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஆஃப்கானிஸ்தானுக்கு சென்றுவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருப்பார்கள்.

ஆனால் அதற்கு மறுநாள் டிசம்பர் 31ம் தேதி சிட்னி தண்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தான் ஆடும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் களமிறங்கினார் ரஷீத் கான். இதைக்கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ரஷீத் கான் பந்துவீசும்போது, அவரது அர்ப்பணிப்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டினர். ஒரு ஓவர் முடியும் வரை ரஷீத் கானின் அர்ப்பணிப்பிற்கு மரியாதை செலுத்தினர். அந்த போட்டியில் ரஷீத் கான் 4 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் ரஷீத் கான் ஆடும் அடிலெய்டு அணி வெற்றி பெற்றது. 

கிரிக்கெட் மீதான ரஷீத் கானின் அர்ப்பணிப்பு, உலகளவில் அவர் மீதான மதிப்பை அதிகப்படுத்தியுள்ளது.