rashid khan thinking a long time to reply sachin

19 வயதே ஆன ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான், பவுலிங்கில் சாதனைகளை குவித்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ரஷீத் கான், இந்த சிறு வயதிலேயே பவுலிங்கில் பல சாதனைகளை புரிந்துவிட்டார்.

ஐபிஎல் 11வது சீசனில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய ரஷீத் கான், தனது திறமையான மற்றும் நேர்த்தியான பவுலிங்கால் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை வாரி குவித்தார். 

ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய ரஷீத் கான், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே சிறப்பாக செயல்பட்டு, பல ஜாம்பவான்களின் பாராட்டுகளை குவித்தார். டி20 போட்டிகளில் உலகின் தலைசிறந்த ஸ்பின் பவுலர் என சச்சின் பாராட்டினார். ராகுல் டிராவிட், ஷேன் வார்னே ஆகியோரும் பாராட்டினர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர், டி20 போட்டிகளில் மிகக்குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என அடுக்கடுக்கான சாதனைகளை புரிந்து வருகிறார். தற்போது இவருக்கு 19 வயதே ஆவதால், இவர் ஓய்வு பெறுவதற்குள் பவுலிங்கில் பல சாதனைகளை புரிந்துவிடுவார் என்பதில் ஐயமில்லை.

ஐபிஎல்லில் கொல்கத்தாவுக்கு எதிரான இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் ரஷீத் கானின் ஆட்டத்தை கண்டு வியந்த சச்சின், டி20 போட்டிகளில் உலகின் தலைசிறந்த ஸ்பின் பவுலர் ரஷீத் கான் என டுவிட்டரில் புகழாரம் சூட்டியிருந்தார். அதேபோல தோனி, விராட் கோலி ஆகியோரும் ரஷீத் கானின் திறமையை புகழ்ந்தனர்.

இந்நிலையில், அண்மையில் ரஷீத் கான் கொடுத்த பேட்டி ஒன்றில், சச்சின், தோனி, கோலி ஆகியோர் பாராட்டியது குறித்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

அதில், இவ்வளவு இளம் வயதில் இத்தனை சாதனைகள் கைகூடும் என நான் நினைக்கவில்லை. கனவு மாதிரி உள்ளது. சச்சின் என்னை பாராட்டி டுவீட் செய்திருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. அவருக்கு என்ன பதிலளிப்பது என நீண்ட நேரம் யோசித்தேன். தோனி மற்றும் கோலி ஆகியோரும் பாராட்டினர். இவர்களின் பாராட்டு எனக்கு மேலும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.