rashid khan proud to play test match in early age

டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் மோதுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி, வரும் 14ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியான இந்திய அணியுடன் மோதுகிறது. அதனால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது.

அதுமட்டுமல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணி, ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், முகமது நபி ஆகிய சிறந்த ஸ்பின்னர்களை கொண்டிருப்பதால், அவர்களை போட்டி சவாலானதாக இருக்கும். உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களை கொண்டிருப்பதால், ஆஃப்கானிஸ்தான் அணி நம்பிக்கையுடனும் மன வலிமையுடனும் இந்திய அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டி தொடர்பாக பேசிய 19 வயதே ஆன ரஷீத் கான், என்னைப் போன்ற இளம் வீரர்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு டெஸ்ட் கிரிக்கெட் ஒரு மிகச்சிறந்த களம். இந்த இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட் ஆட வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். இந்த வாய்ப்பு என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக வளர்த்தெடுக்க உதவும் என ரஷீத் தெரிவித்தார்.