rashid khan names the best batsman in the world cricket

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டரான ரஷீத் கான், உலகின் தலைசிறந்த ஸ்பின் பவுலராக வலம்வருகிறார். பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சிறந்து விளங்குகிறார். ஐபிஎல்லில் அசத்தலாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, சச்சின், டிராவிட் ஆகியோரின் பாராட்டுகளை பெற்றார். அதன்பிறகு வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடி, வங்கதேசத்தை வாஷ் அவுட் செய்ய பெரும் பங்காற்றினார்.

அடுத்ததாக வரும் 14ம் தேதி இந்திய அணியுடன் ஆஃப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. டெஸ்ட் அந்தஸ்து பெற்றபிறகு ஆஃப்கானிஸ்தான் ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கழுத்து காயம் காரணமாக கலந்துகொள்ளவில்லை. 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷீத் கான், தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த வீரர் விராட் கோலி. அவருக்கு பந்துவீச விரும்புகிறேன். கோலிக்கு பந்துவீச வேண்டும் என்பது அனைத்து பவுலர்களின் விருப்பமாக இருக்கும். அவரது விக்கெட்டை வீழ்த்துவது என்பது சிறப்பானது. அவருக்கு டெஸ்ட் போட்டியில் பந்துவீச முடியாததை எனது துரதிர்ஷ்டம் என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.