Rani Rampal became captain again for Indian women hockey team
இந்திய மகளிர் ஹாக்கி அணியில் மீண்டும் கேப்டன் ஆனார் ராணி ராம்பால். கோல்கீப்பர் சவீதா துணை கேப்டனாக செயல்படுகிறார்.
ஸ்பெயின் நாட்டில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய மகளிரணி விளையாட உள்ளது.
இலண்டனில் வரும் ஜூலை மாதம் நடக்கவுள்ள உலக மகளிர் ஹாக்கி கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செல்கிறது.
அணியின் கேப்டனும், முன்கள வீராங்கனையுமான ராணி ராம்பாலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அதில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது.
இந்த நிலையில் ரானி ராம்பால் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். கோல்கீப்பர் சவீதா துணை கேப்டனாக செயல்படுகிறார்.
இதுதொடர்பாக அணியின் பயிற்சியாளர் மார்ஜின், "ஸ்பெயினில் நடக்கவுள்ள தொடர் நமது அணிக்கு சிறந்த பயிற்சியை அளிக்கும். மேலும் உலகக் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு நமது அணியின் குறைபாடுகளை களைய உதவும்.
இந்த சுற்றுப் பயணத்தில் வீராங்கனைகளுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு தரப்படும். அவர்கள் புத்துணர்வோடு இருப்பது அவசியம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்திய அணியின் விவரம்:
ராணி ராம்பால் (கேப்டன்), சவீதா (துணை கேப்டன்), ஸ்வாதி, சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, சுமன் தேவி, தீபிகா, குர்ஜித் கெளர், சுஷிலா சானு, நமீதா டோப்போ,
லிலிமா மின்ஸ், மோனிகா, நேஹா கோயல், நவ்ஜோத் கெளர், நிக்கி பிரதான், வந்தனா கட்டாரியா, நவ்நீத் கெளர், லால்ரேமிசியாமி, உதிதா, அனுபா பர்லா.
