Ramakumari and Yuki Pompuri have worked well this year - former tennis player praises ...
இந்திய டென்னிஸ் வீரர்களான ராம்குமார் ராமநாதன், யூகி பாம்ப்ரி ஆகியோர் இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளனர் என்று முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ். அப்போது அவர் கூறியது: "ராம்குமாரும், யூகி பாம்ப்ரியும் இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர்கள் இருவருக்குமே முக்கியமானதாகும்.
குறிப்பாக, கொல்கத்தாவில் கடந்த சில நாள்களாக ராம்குமாரின் ஆட்டத்தை கவனித்து வருகிறேன். அதில் நல்லதொரு முதிர்ச்சி தெரிகிறது. இவர்களைப் போல் சாகேத் மைனேனியும் நல்லமுறையில் ஆடுகிறார்.
இந்திய வீரர்கள் 20-க்கு பிந்தைய வயதுகளில் உடலளவில் முதிர்ச்சி அடைகின்றனர். ராம்குமார், யூகி பாம்ப்ரியைப் போல அந்த வயதுகளில் ஆக்ரோஷமாக ஆடத் தொடங்கினால், ஆட்டத்தில் மாற்றத்தை உணர முடியும். அதன் பலனாக அவர்களின் 27 முதல் 32 வயதில் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள்.
டேவிஸ் கோப்பை உலக குரூப்பிற்கு இந்தியா தகுதி பெற, முதலில் ஒற்றையர்கள் ஆட்டத்தில் இந்தியாவின் 3-4 வீரர்கள் வெற்றி பெற வேண்டும். அதற்குகந்த வகையில் முதல் 100 இடங்களுக்கு முன்னேற வேண்டும்.
உலக குரூப் சுற்றிற்கு முன்னேறுவது கடினம் என்றால், அதில் நிலைத்திருப்பது அதைவிடக் கடினமாகும்" என்று அவர் கூறினார்.
