தோனி கூறிய ஆலோசனையை பந்துவீசும் போது ரெய்னா பின்பற்றாததால் பவுண்டரிகள் அடிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இந்திய அணி வென்றது. இதில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் கேப்டன் கோலி முதுகுவலி காரணமாக கலந்துகொள்ளவில்லை. அதனால் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை வகித்தார். 

தோனி கேப்டனாக இல்லாவிட்டாலும் விக்கெட் கீப்பிங் செய்யும்போது, அவ்வப்போது ஸ்பின் பவுலர்களுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்குவார். தோனியின் ஆலோசனைகள் பல நேரங்களில் நேர்மறையான விளைவுகளையும் கொடுக்கும். அந்த வகையில், கடைசி டி20 போட்டியில் 14வது ஓவரை வீசிய ரெய்னாவுக்கு தோனி ஆலோசனை வழங்க, அதை ரெய்னா பின்பற்றாததால் இரண்டு பவுண்டரிகள் அடுத்தடுத்து அடிக்கப்பட்டன. 

14-வது ஓவரை சுரேஷ் ரெய்னா  வீசினார். ரெய்னா வீசிய முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் சென்றுவிட்டன. அடுத்த பந்துகளில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக தோனி அவரிடம் ஆலோசனை கூறினார். அக்சர் படேல் வீசிய முதல் ஓவரில் ஏற்கெனவே 16 ரன்கள் சென்றுவிட்டதால் இந்திய அணி ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருந்தது.

இதனால், ரெய்னாவுக்கு கேட்கும் வகையில், பந்தை வேகமாகவும் ஸ்டம்புக்கு நேராகவும் வீச வேண்டாம் என தோனி சத்தமாக ஆலோசனை கூறினார். அதை காதில் வாங்காத ரெய்னா, ஸ்டம்புக்கு நேராக வேகமாக வீசினார். தோனியின் ஆலோசனைக்கு மாறாக ரெய்னா வீசிய இரண்டு பந்துகளையும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஜோன்கர் பவுண்டரிகள் அடித்தார். 

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/8shuN7NU-jM" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

தோனி கூறிய ஆலோசனை, ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது. தோனியின் ஆலோசனையை கேட்காமல் ரெய்னா பந்துவீசி பவுண்டரி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.