இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கையே ஓங்கியிருக்கிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்துவரும் நிலையில், சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இந்திய அணி வெற்றி பெற முடியாவிட்டாலும் போட்டி டிராவில் தான் முடியும் என்பதால் தொடரை இந்திய அணி வெல்வது உறுதியாகிவிட்டது. 

சிட்னி டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, புஜாரா, ரிஷப் பண்ட்டின் சதங்கள் மற்றும் மயன்க், ஜடேஜா ஆகியோரின் சிறப்பான அரைசதங்கள் ஆகியவற்றால் 622 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி விக்கெட்டை இழக்காமல் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்தது. மூன்றாம் நாள் ஆட்டமான இன்று, தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவை 27 ரன்களில் வீழ்த்தினார் குல்தீப். அபாரமாக ஆடிய மார்கஸ் ஹாரிஸ் 79 ரன்களை குவித்தார். சிறப்பாக ஆடிய அவரை ஜடேஜா அவுட்டாக்கினார். அதனால் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் ஹாரிஸ். 

ஷான் மார்ஷ் 8 ரன்களில் ஜடேஜாவின் சுழலில் சிக்கி வெளியேறினார். கடந்த போட்டிகளில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை இழந்தது. 

லாபஸ்சாக்னேவின் விக்கெட்டை மட்டும் ஷமி வீழ்த்தினார். பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் ஆகிய இருவரையும் குல்தீப் பெவிலியனுக்கு அனுப்பினார். மூன்றாம் நாளான இன்று, டீ பிரேக்கிற்கு பிறகு களத்திற்கு வந்த முதல் ஓவரிலேயே டிம் பெய்னை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் குல்தீப்.

ஆஸ்திரேலிய அணி 198 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு ஹேண்ட்ஸ்கம்ப்புடன் பாட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல், அதேநேரத்தில் சீரான வேகத்தில் ரன்களையும் சேர்த்தது. மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில் 16.3 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், இடையிலேயே போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் மழை பெய்ததால் மூன்றாம் நாளின் எஞ்சிய ஆட்டம் கைவிடப்பட்டது. அதனால் இன்றைய ஆட்டத்தில் 16.3 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டன. 

இந்த ஓவர்களை வீசியிருந்தால் குறைந்தது 2 விக்கெட்டுகளை இந்திய அணி எடுத்திருக்கக்கூடும். ஒருவேளை விக்கெட்டை இந்திய அணி எடுக்கவில்லை என்றாலும்கூட, ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் அதிகரித்திருக்கும். இவை இரண்டுமே தடைபட்டுவிட்டது. இந்த 16 ஓவர்களை ஈடுகட்டும் விதமாக எஞ்சிய இரண்டு நாட்கள் ஆட்டமும் அரைமணி நேரம் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. ஹேண்ட்ஸ்கம்ப்பும் கம்மின்ஸும் களத்தில் உள்ளனர்.