ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனானது. இதையடுத்து வரும் டிசம்பர் 6ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய லெவன் அணி டாஸ் வென்று, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்த போட்டி, டெஸ்ட் தொடருக்கான முன்னோட்டம் என்பதால் இந்திய அணியில் பிரித்வி ஷாவுடன் யார் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், பிரித்வியுடன் முரளி விஜயை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியிருந்த நிலையில், தொடர்ந்து சொதப்பிவரும் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டிருந்தார். 

வழக்கம்போலவே இந்த முறையும் ராகுல் ஏமாற்றினார். வெறும் 3 ரன்னில் வெளியேறினார். அவரை தவிர மற்ற வீரர்கள் அனைவருமே சிறப்பாக ஆடினர். பிரித்வி ஷா, புஜாரா, கோலி, ஹனுமா விஹாரி, ரஹானே ஆகியோர் அரைசதம் அடித்தனர். ரோஹித் மட்டும் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 40 ரன்களில் வெளியேறினார். இந்திய அணியில் சரியாக ஆடாத ஒரே பேட்ஸ்மேன் ராகுல் மட்டும்தான்.

ராகுல் தொடர்ந்து சொதப்பிவரும் பட்சத்திலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மிக முக்கியமான டெஸ்ட் தொடர் இது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என வெளிநாடுகளில் தொடர்ந்து தோற்றுவரும் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடரில் வெல்வது மிக முக்கியம். எனவே முக்கியமான இந்த தொடரில் அணி தேர்வும் மிக முக்கியமான ஒன்று. வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டுகளை வைத்திருக்கும் முரளி விஜயை புறக்கணித்துவிட்டு பயிற்சி போட்டியில் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கவாஸ்கரும் கூட முதல் போட்டியில் முரளி விஜயைத்தான் தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் ராகுலை பயிற்சி போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கியிருப்பது முதல் போட்டியில்தான் ராகுல் தான் தொடக்க வீரர் என்பதை பறைசாற்றும் விதமாகவே அமைந்துள்ளது. ஆனால் அவரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தவறுகிறார். வெறும் 3 ரன்னில் வெளியேறி மீண்டும் ஒருமுறை சொதப்பியுள்ளார். 

பயிற்சி போட்டியில் ராகுல் சொதப்பியுள்ள நிலையில், முதல் போட்டியில் முரளி விஜய் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையும் மீறி ராகுலே களமிறக்கப்பட்டால், இந்திய அணி மீண்டும் சொதப்பலான தொடக்கத்தைத்தான் பெறும்.