தோனியின் இடத்தை பிடிக்க இந்திய வீரர் கே.எல்.ராகுல் திட்டமிட்டு வருகிறார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிவரும் போதிலும், அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் ராகுல் தவித்து வருகிறார். 

கடந்த 2015ன் இறுதியிலேயே தான் ஒரு சிறந்த டெஸ்ட் வீரர் என்பதை நிரூபித்து விட்டார். அதேபோல அறிமுக ஒருநாள் போட்டியிலேயே அசத்தல் சதம். டி20 போட்டியிலும் அதிரடி ஆட்டம் என மிரட்டிய ராகுலுக்கு, நிரந்தரமாக அணியில் இடம் கிடைக்கவில்லை. காரணம் டாப் ஆர்டரில் சிறந்தவர் ராகுல். ஆனால் ரோஹித், தவான், கோலி என நிரந்தர டாப் ஆர்டர் உள்ளதால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை, தவான், முரளி விஜய், ராகுல் மூவருக்கும் மாறிமாறி வாய்ப்பளிக்கப்படுகிறதே தவிர நிரந்தர இடம் வழங்கப்படுவதில்லை. 

அதேபோல், ஒருநாள் போட்டியிலும் ரோஹித், தவான், கோலி ஆகிய முதல் மூன்று இடங்கள் நிரந்தரமானவை. 4 மற்றும் 5வது இடத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரஹானே, கேதர் ஜாதவ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ரெய்னாவும் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். எனவே தனக்கென அணியில் ஒரு கிடைக்காமல் ராகுல் தவித்துவருகிறார்.

டெஸ்ட் போட்டியில் சஹா, தினேஷ் கார்த்திக்.. அவ்வளவு ஏன் பல ஆண்டுகளாக ஆடாமல் இருந்த பார்த்திவ் படேலுக்கு கூட அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. காரணம் விக்கெட் கீப்பிங். தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால், அவரது இடத்தை சஹா, பார்த்திவ் படேல், தினேஷ் கார்த்திக்கை கொண்டு நிரப்பி வருகின்றனர்.

அதேபோல், அதிகபட்சம் தோனி அடுத்த உலக கோப்பை வரைதான் ஆடுவார். அதன்பின்னர் ஓய்வு பெற்றுவிடுவார். அதனால் தனக்கென அணியில் நிரந்தர இடம் கிடைக்க வேண்டுமென்றால், பேட்டிங்கை கடந்து நம்மிடம் ஒரு விஷயம் இருக்க வேண்டும். அதுதான் விக்கெட் கீப்பிங் என்பதை உணர்ந்து ராகுல் விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்திவருகிறார்.

விஜய் ஹசாரே போட்டியில் கீப்பிங் செய்துள்ளார் ராகுல். அதேபோல் வர இருக்கின்ற ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் அணியில் இவர்தான் விக்கெட் கீப்பிங் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. விக்கெட் கீப்பிங்கிலும் சிறந்து விளங்கும் பட்சத்தில், தோனிக்கு அடுத்த சாய்ஸ் ராகுலாகத்தான் இருப்பார். 

பார்த்திவ் படேல் பல ஆண்டுகளுக்கு பிறகு வேறு வழியில்லாமல் சில போட்டிகளில் சேர்க்கப்படுகிறார். தினேஷ் கார்த்திக்கிற்கு வயதாகிவிட்டது. இனிமேல் நிரந்தர இடம் கிடைக்க வாய்ப்பில்லை. சஹா சிறந்த கீப்பர் என்றாலும் பெரிய பேட்ஸ்மேன் கிடையாது. எனவே ராகுல் சிறந்த பேட்ஸ்மேன் என்பதால், கீப்பிங்கிலும் சிறந்துவிளங்கும் பட்சத்தில் அணியில் நிரந்தர இடம் கிடைக்கும். ஆனால் இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக உள்ள ரிஷப் பண்ட், தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளார். எனினும் ராகுல் கீப்பிங்கில் சிறந்துவிளங்கும் பட்சத்தில் அணியில் இடம் கிடைக்க வாய்ப்புண்டு.

அதனால் தோனியின் இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் ராகுல், கீப்பிங்கில் கவனம் செலுத்துகிறார். தோனியின் இடத்தை நிரப்புவாரா ராகுல்? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.