இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து பேசிய விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. 

கிரிக்கெட் அல்லாத ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்த சம்பவத்திற்கு வருந்தி பிசிசிஐ-யிடம் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கோரினார். எனினும் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருவதால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பாண்டியாவும் ராகுலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினர். பாண்டியாவிற்கு பதிலாக விஜய் சங்கரும் ராகுலுக்கு பதிலாக ஷுப்மன் கில்லும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், பாண்டியாவும் ராகுலும் தொடர்ந்து பல போட்டிகளை இழந்துவருகின்றனர். இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங் வலுவாக உள்ளதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல் அணியில் இடம்பெற்றாலும் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலிய தொடரில் ஏற்கனவே 3 ஒருநாள் போட்டிகளை இழந்துவிட்ட நிலையில், நியூசிலாந்து தொடரிலும் ஆடவில்லை.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்டர் 19 இந்திய அணி மற்றும் இந்தியா ஏ ஆகிய அணிகளின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கடந்த காலத்திலும் வீரர்கள் தவறிழைத்துள்ளனர். எவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்தாலும் எதிர்காலத்திலும் இளம் வீரர்கள் இதுபோல நடக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அதிகபட்சமாக ரியாக்ட் செய்வதை தயவுசெய்து நிறுத்த வேண்டும் என்று ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.