இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், இந்திய அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்பட்டவர். பல இக்கட்டான சூழல்களில் களத்தில் நங்கூரம் போட்டு சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். அவரது இடத்தை அவருக்கு பிறகு யாரும் நிரப்பவில்லை, யாராலும் நிரப்ப முடியாது என்றாலும், அவருக்கு பிறகு இந்திய அணியில் அதுபோன்றதொரு பேட்டிங்கை ஆடி இந்திய அணியை காப்பவர் புஜாரா.

டிராவிட்டுக்கும் அவருக்கு அடுத்து அவர் இறங்கிய மூன்றாம் வரிசையில் இறங்கி ஓரளவுக்கு அவர் இல்லாத குறையை தீர்த்த புஜாராவுக்கும் இடையே நிறைய சம்பவங்கள் ஒரே மாதிரியாக நடந்துவருகின்றன. இருவருக்கும் இடையே இருந்த ஒற்றுமைகள் குறித்து ஏற்கனவே நமது ஏசியாநெட் தமிழ் தளத்தில் ஒரு கட்டுரை பதிவிட்டிருந்தோம். 

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் சதமடித்த புஜாரா, மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்டிலும் சதமடித்தார். இந்த போட்டியில் இந்திய அணி 137ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முதல் இன்னிங்ஸில் புஜாரா - கோலி ஜோடியின் பொறுப்பான ஆட்டம் முக்கிய காரணம்.

இந்த முறை புஜாரா அடித்த சதம், மீண்டும் டிராவிட்டுடனான ஒப்பீட்டு பேச்சுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், புஜாராவை தன்னுடன் ஒப்பிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிராவிட், இதுபோன்ற ஒப்பீடுகளை நான் விரும்பவில்லை. ஒவ்வொரும் வித்தியாசமான வீரர். ஒவ்வொருவருக்குள்ளும் தனித்துவம் இருக்கிறது. புஜாரா இந்த தொடரில் மட்டுமல்ல, இதுவரை அவர் சிறப்பாக ஆடியுள்ள அனைத்து இன்னிங்ஸ்களுமே மிகவும் இக்கட்டான சூழல்களில் ஆடப்பட்டதாகும் என்றும் ஆனால் ஒப்பீடுகள் கூடாது என்றும் டிராவிட் தெரிவித்தார்.