இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தவான் - ராகுல் ஜோடி, அரிய சம்பவம் ஒன்றை செய்துள்ளனர். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் இரண்டு போட்டிகளில் மிகவும் மோசமாக சொதப்பி, இரண்டிலுமே தோல்வியை தழுவிய இந்திய அணி, மூன்றாவது போட்டியில் சிறப்பாக ஆடி, வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. 

மூன்றாவது போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய அணி, வெற்றி இலக்காக இங்கிலாந்து அணிக்கு 521 ரன்களை நிர்ணயித்துள்ளது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி, 23 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளதால், இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

இந்த போட்டியில் தவான் - ராகுல் தொடக்க ஜோடி அரிய சம்பவம் ஒன்றை செய்துள்ளனர். இந்த ஜோடி முதல் இன்னிங்ஸில் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். முதல் இரண்டு போட்டிகளில் தொடக்க ஜோடிகள் சொதப்பின. ஆனால் இந்த போட்டியில் ஆண்டர்சன், பிராட் ஆகிய அனுபவ பவுலர்களின் சிறப்பாக கையாண்டு, முதல் விக்கெட்டுக்கு 18.4 ஓவர்கள் ஆடி 60 ரன்களை குவித்தனர்.

அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸிலும் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 60 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்த ஜோடி ஒரே ஸ்கோரை அடித்துள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இந்த சம்பவம் மூன்றாவது முறையாக நடந்துள்ளது. 

இதற்கு முன்னதாக 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் - டிவில்லியர்ஸ் ஜோடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 124 ரன்கள் எடுத்தது. 

அதேபோல 2009ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் - கேடிச் ஜோடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 62 ரன்கள் எடுத்தது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவின் ராகுல் - தவான் ஜோடி, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 60 ரன்கள் எடுத்துள்ளது.