ராகுல் தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் வீணாக்குவதோடு, அணியையும் பின்னோக்கி இழுக்கிறார். அவர் என்னதான் சொதப்பினாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. 

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் தொடர்ந்து சொதப்பிவருகிறார். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக படுமோசமாக சொதப்பினார் ராகுல். முரளி விஜய், தவான் ஆகிய வீரர்கள் சோபிக்காதபோது அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். ஆனால் ராகுலுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் கருதி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும், அதற்கும் ஒரு அளவு இருக்கிறது அல்லவா? கடந்த ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ராகுல், வெறும் 468 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 12 போட்டிகளில் ஆடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அதேநேரத்தில் 4 முறை டக் அவுட்டாகியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பியதால், மூன்றாவது போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டு மயன்க் அகர்வாலும் ஹனுமா விஹாரியும் தொடக்க வீரர்களாக களமிறக்கப்பட்டனர். ஹனுமா விஹாரி இறங்கிய 6ம் வரிசையில் ரோஹித் சர்மா இறங்கினார். ஆனால் ரோஹித் சர்மாவிற்கு குழந்தை பிறந்திருப்பதால், அவர் நாடு திரும்பிவிட்டதால் 6ம் வரிசையில் ஹனுமா விஹாரி இறங்க வேண்டியிருந்ததால், ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பையும் தவறவிட்டார் ராகுல். வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். 

ராகுல் தொடர்ந்து சொதப்பிவரும் அதேவேளையில், மயன்க் அகர்வால் அருமையாக ஆடிவருகிறார். காயத்தால் தொடரிலிருந்து வெளியேறிய இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷாவும் அருமையாக ஆடிவருகிறார். எனவே இனியும் ராகுலை நம்புவதை விடுத்து மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரையும் எதிர்காலத்தில் தொடக்க வீரர்களாக களமிறக்குவது நல்லது.