இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிராக இந்திய அணி பயிற்சி போட்டியில் ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ராகுலை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினார். பிரித்வி ஷா, புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். ரோஹித் சர்மா 40 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 11 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து ஆஸ்திரேலிய லெவன் அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய லெவன் இன்னிங்ஸின் போது அஷ்வின் வீசிய 15வது ஓவரில் அந்த அணியின் தொடக்க வீரர் மேக்ஸ் பிரயாண்ட் அடித்த பந்தை பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்க முயன்ற இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் பாதியில் களத்திலிருந்து வெளியேறினார். பின்னர் அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அதன்பிறகு அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா ஆடமாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பிரித்வி ஷா மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், அவரது காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்த பயிற்சி போட்டியில் கூட சிறப்பாக ஆடி 66 ரன்களை குவித்திருந்தார். 

பிரித்வி ஷா காயத்தால் ராகுல் மற்றும் முரளி விஜயின் ரூட் கிளியர் ஆகியுள்ளது. பிரித்வி ஷா கண்டிப்பாக தொடக்க வீரராக களமிறங்குவார் என்பதால், ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரில் ஒருவர்தான் பிரித்வியுடன் களமிறங்கும் சூழல் இருந்தது. அதனால் ஒருவர் வாய்ப்பை இழக்கும் சூழல் இருந்தது. ஆனால் இப்போது பிரித்வி ஷா காயத்தால் முதல் போட்டியில் ஆடாததால் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் தொடக்க ஜோடியாக களமிறங்க உள்ளனர். 

பிரித்வி ஷாவின் காயத்தால் இருவரும் இந்திய அணியில் ஆட வாய்ப்பு பெற்றுள்ளனர். இருவருக்குமே தங்கள் திறமையை மீண்டும் நிரூபிக்க இது ஒரு அரிய வாய்ப்பு. ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் ராகுல் மற்றும் இங்கிலாந்தில் சோபிக்காத முரளி விஜய், இருவருமே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இருவரும் என்ன செய்கின்றனர் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.