விராட் கோலியை விட ரஹானே தான் சிறந்த கேப்டன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக செயல்படும் இயல்பு கொண்டவர். கோலியின் ஆக்ரோஷத்தை இந்திய அணியின் பல முன்னாள் வீரர்களும் ஆதரிக்கவே செய்கின்றனர். ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல வெளிநாட்டு வீரர்களும் கோலியின் ஆக்ரோஷத்தையும் ஆட்டத்தின் மீதான ஈடுபாட்டையும் ஆதரிக்கின்றனர். 

ஆனால் மிட்செல் ஜான்சன் போன்ற ஒரு சிலர் கோலியை தொடர்ந்து கடுமையாக சாடிவருகின்றனர். ஏற்கனவே பலமுறை கோலியை சீண்டியுள்ள மிட்செல் ஜான்சன், டிம் பெய்னுடன் கை குலுக்கும்போது அவரை பார்ப்பதை தவிர்த்துவிட்டு கடமைக்கு கை குலுக்கிய கோலியை முன்பை விட தற்போது கடுமையாக விமர்சித்துவருகிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களத்திலேயே கோலிக்கும் டிம் பெய்னுக்கும் முட்டிக்கொண்டது. அந்த போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுடன் கை குலுக்கும்போது அவரை பார்ப்பதை தவிர்த்துவிட்டு வேண்டா வெறுப்புடன் கடமைக்கு கை குலுக்கினார் கோலி. கோலியின் இந்த செயலை மிட்செல் ஜான்சன் கடுமையாக சாடினார். மரியாதை தெரியாத மூடர் கோலி என கடுமையாக விமர்சித்தார். 

இந்நிலையில், கோலியை மீண்டும் சாடியுள்ளார் மிட்செல் ஜான்சன். மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கோலியை விட ரஹானே தான் சிறந்த கேப்டன் என கருத்து தெரிவித்து கோலியை சீண்டியுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மிட்செல் ஜான்சன், ரஹானே தான் சிறந்த கேப்டன். மிகச்சிறந்த மனநிலை உடைய நிதானமானவர் ரஹானே. அவர் மிகவும் கடுமையான போட்டியாளர், ஆக்ரோஷமானவர் மட்டுமல்லாது களத்தில் அவரது உடல் மொழி இளம் வீரர்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணம். எனவே அவர் தான் கோலியை விட சிறந்த இந்திய கேப்டன் என மிட்செல் ஜான்சன் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

இதே கருத்தை ஏற்கனவே ஒருமுறை மிட்செல் ஜான்சன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.