விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து ஸ்பெய்னை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் விலகியுள்ளார். 

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ஸ்பெய்னை சேர்ந்த ரஃபேல் நடால். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற மிகச்சிறந்த டென்னிஸ் வீரரான நடால், உலக டென்னிஸ் தரவரிசையில் 3வது இடத்தில் உள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்தார் நடால். 

இந்நிலையில், உடல்நிலையை கருத்தில்கொண்டு விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்துள்ள நடால், விம்பிள்டன், ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

பொதுவாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடருக்கும் விம்பிள்டனுக்கும் இடையே குறைந்தது 3 வாரங்கள் இடைவெளி இருக்கும். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரெஞ்சு ஓபன் போட்டிகள் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.