punjab thrill win in last ball against delhi daredevils
கடைசி பந்தில் டெல்லி அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 11வது சீசனின் 22வது போட்டி டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் கௌதம் கம்பீர், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
நேற்றைய போட்டியில் டெல்லி அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஜேசன் ராய் நீக்கப்பட்டு பிளன்கட் சேர்க்கப்பட்டார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற கேப்டன் பிரித்வி ஷாவிற்கு நேற்று வாய்ப்பளிக்கப்பட்டது. அதேபோல் பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் நீக்கப்பட்டு, டேவிட் மில்லர் சேர்க்கப்பட்டார்.
பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராகுலும் ஆரோன் ஃபின்ச்சும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஃபின்ச் 2 ரன்களில் வெளியேறினார். நிதானமாக ஆடிய ராகுல், 23 ரன்களிலும் அகர்வால் 21, யுவராஜ் சிங் 14 ரன்களிலும் அவுட்டாகினர். கருண் நாயர் 34 ரன்கள் அடித்தார். டேவிட் மில்லர் 26 ரன்கள் அடித்தார்.
எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால், வெறும் 143 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி எடுத்தது.
144 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் கம்பீர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய பிரித்வி, 10 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அவுட்டானார். கம்பீர், மேக்ஸ்வெல், ரிஷப் பண்ட், கிறிஸ்டியன் என யாருமே சரியாக ஆடாமல் ஒற்றை இலக்கங்களிலும் பதின் ரன்களிலும் வெளியேறினர்.
ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் என்ற இக்கட்டான சூழல் ஏற்பட்டது. கடைசி ஒவரை முஜீபுர் ரஹ்மான் வீசினார். முதல் பந்தில் ரன் இல்லை, இரண்டாவது பந்தில் சிக்ஸ், மூன்றாவது பந்தில் ரன் இல்லை, நான்காவது பந்தில் 2 ரன்களும் ஐந்தாவது பந்தில் சிக்ஸரும் அடித்தார் ஷ்ரேயாஸ் ஐயர்.
இதையடுத்து கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. ஆட்டம் விறுவிறுப்பானது. ரசிகர்கள் இருக்கையின் நுணியில் அமர்ந்திருந்தார்கள். கடைசி பந்தை முஜீபுர் வீச, ஷ்ரேயாஸ் ஐயர் தூக்கி அடித்த பந்தை பின்ச் கேட்ச் செய்தார். இதையடுத்து கடைசி பந்தில் ஐயரை வீழ்த்தி, பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் பஞ்சாப் அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
