ஐபிஎல் 11வது சீசன் கோலாகலமாக நாளை தொடங்குகிறது. 10 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. நாளை தொடங்கும் 11வது சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையும் முன்னாள் சாம்பியன் சென்னையும் மோதுகின்றன.

இந்த ஐபிஎல் தொடர், பஞ்சாப், டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகளுக்கு மிக முக்கிய தொடராக அமைந்துள்ளது. இந்த மூன்று அணிகளும் தான் இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. அதிலும், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள், கடந்த 10 சீசனில் பேசும்படியாக எதுவும் செய்ததில்லை.

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள், இதுவரை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கே தடுமாறியுள்ளனர். ஆனால், இந்த முறை இந்த அணிகள் புதிய உத்வேகத்துடன் களமிறங்குகின்றன. 

பேட்ஸ்மேன்கள்:

சேவாக் ஆலோசகராக உள்ள பஞ்சாப் அணிக்கு, தமிழக வீரர் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளனர். ஆரோன் பிஞ்ச், கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், மயாங்க் அகர்வால், யுவராஜ் சிங், டேவிட் மில்லர் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வரும் மார்கஸ் ஸ்டோய்னிஸும் பஞ்சாப் அணியில் இருப்பது கூடுதல் பலம். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்தக்கூடிய பவுலர் இவர்.

பவுலர்கள்:

அதேபோல் ஸ்பின் பவுலிங்கை பொறுத்தமட்டில் அஸ்வின் இருக்கிறார். அஸ்வினுக்கு உறுதுணையாக அக்சர் படேல் இருக்கிறார். இதுவரை நடந்துள்ள 10 சீசனில் 120 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றியுள்ளார். ஆனால் சொல்லும்படியான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. ஆண்ட்ரூ டையை மட்டுமே சார்ந்திருக்ககூடிய நிலை உள்ளது. அவரை தவிர்த்தால், மோஹித் சர்மா உள்ளார்.

அஸ்வின் கேப்டன்சி:

சிறந்த வீரர்களை கொண்டுள்ள பஞ்சாப் அணி, இந்த முறையாவது ஐபிஎல் தொடரை வெல்ல வேண்டும் என அந்த அணி முனைப்பு காட்டிவருகிறது. புது உத்வேகத்தை கொடுப்பதற்காக அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மாநில அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்திய அனுபவம் அஸ்வினுக்கு உள்ளது. எனவே சவாலான சூழல்களை எளிதாக கையாள்வார் என நம்பலாம்.

இதுவரை ஐபிஎல் தொடரை வெல்லாத பஞ்சாப் அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பது அஸ்வினுக்கும் தனிப்பட்ட முறையில் அவரை நிலைநிறுத்த உதவும். இந்திய அணியில் இடத்தை இழந்து தவிக்கும் அஸ்வினுக்கு திருப்புமுனையாக கூட அது அமையும்.

தோனி தலைமையில் இந்திய அணியில் ஸ்பின் பவுலிங்கில் மிரட்டிய அஸ்வின், தற்போது சாஹல், குல்தீப் போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்களின் வருகையால் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார். எனவே தன்னை வீரராகவும் கேப்டனாகவும் நிரூபிக்க அஸ்வினுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. அதிரடி வீரர்களை கொண்டுள்ள பஞ்சாப் அணியை சிறப்பாக வழிநடத்தி தொடரை வென்று தன்னையும் நிலைநிறுத்துவாரா? என பார்ப்போம்.