ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களை விட இந்த தொடர் சற்று கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்தமுறை களமிறங்குகின்றன. தோனி தலைமையில் மீண்டும் சென்னை அணி களம் காண்பது, இதுவரை தோனியின் தலைமையின் கீழ் விளையாடிய அஸ்வின், தோனியை எதிர்த்து விளையாட இருப்பது ஆகிய சம்பவங்களால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பஞ்சாப் அணிக்கு அஸ்வின், கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக் என இரண்டு தமிழர்கள் இந்த முறை கேப்டன்களாக செயல்பட உள்ளனர்.

இந்நிலையில், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியின் உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதாவது, ஒவ்வொரு அணியும் 14 போட்டிகள் விளையாடும். அவற்றில் 7 போட்டிகள் அந்தந்த அணியின் சொந்த ஊரில் நடக்கும்.

அந்த வகையில், பஞ்சாப் அணி 7 போட்டிகளை மொஹாலியில் விளையாட வேண்டும். ஆனால், இந்த முறை 3 போட்டிகளை மட்டுமே மொஹாலியில் விளையாட உள்ளது. ஏப்ரல் 15, 19, 13 ஆகிய தேதிகளில் மட்டுமே மொஹாலியில் போட்டி நடைபெறும்.

மே 4, 6, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் போட்டிகள் இந்தூருக்கு மாற்றப்பட்டுள்ளது. மே 12 முதல் 31ம் தேதி வரை சண்டிகர் விமான நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், அந்த போட்டிகள் நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என்ற பஞ்சாப் கிரிக்கெட் வாரிய கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், பஞ்சாப் அணியின் உள்ளூர் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனினும் அவர்களது ஆதரவு அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கு கிடைக்கும்.