ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 12வது போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதுவரை தோனியின் கேப்டன்சியின் கீழ் ஆடிவந்த அஸ்வின், முதன்முறையாக நேற்று தோனிக்கு எதிராக கேப்டனாக களமிறங்கினார்.

இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. டாஸ் வென்ற தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படாமல், பஞ்சாப் அணியால் அடிப்படை விலையான 2 கோடிக்கு எடுக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆட்டங்களிலும் ஆடாமல் இருந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், நேற்று களமிறங்கினார்.

கிறிஸ் கெய்லும் லோகேஷ் ராகுலும் ஆட்டத்தை தொடங்கினர். ராகுல் வழக்கம்போல தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். ஆனால், தொடக்கத்தில் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் ஆடினார் கெய்ல். சாஹர் வீசிய 6வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசி அதிரடியால் அரங்கை அதிரவைத்தார்.

37 ரன்களில் ராகுலும், 33 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து கெய்லும் அவுட்டாகினர். அதன்பிறகு பஞ்சாப் அணியின் ரன் வேகம் குறைந்தது. பிராவோவும் வாட்சனும் பஞ்சாப் அணியின் ரன் வேகத்தை குறைத்தனர். 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது பஞ்சாப் அணி.

198 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. காயம் காரணமாக ரெய்னா ஆடாததால், அவருக்கு பதிலாக முரளி விஜய் களமிறக்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரர்களா வாட்சனும் முரளியும் களமிறங்கினர். 40 ரன்களுக்கு உள்ளாகவே இருவரும் அவுட்டாகி வெளியேறினர். கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிக்கு வித்திட்ட சாம் பில்லிங்ஸ், நேற்று சோபிக்க தவறினார். வெறும் 9 ரன்களில் பில்லிங்ஸ் வெளியேறினார்.

ராயுடுவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். மீண்டும் தோனியின் தலையில் சுமை இறங்கியது. ராயுடு தோனி ஜோடி சிறப்பாக ஆடியது. ராயுடு 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வினின் அபார த்ரோவால் ரன் அவுட்டாகி வெளியேற, ஜடேஜா களமிறக்கப்பட்டார். 

நிதானமாக ஆடிவந்த தோனி, 18, 19 ஆகிய ஒவர்களை அடித்து நொறுக்கினார். அரைசதமும் அடித்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை மோஹித் சர்மா வீசினார். மோஹித் சர்மாவின் அபார பந்துவீச்சால், அந்த ஓவரில் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.