Asianet News TamilAsianet News Tamil

கெய்லின் அதிரடியில் நிலைகுலைந்த ஹைதராபாத்!! முதல் தோல்வியை பரிசளித்த பஞ்சாப்

punjab defeated hyderabad
punjab defeated hyderabad
Author
First Published Apr 20, 2018, 10:21 AM IST


நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 16வது போட்டி மொஹாலி மைதானத்தில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. தோல்வியை சந்திக்காத ஹைதராபாத் அணி, அதே நிலையை தொடரவும், சென்னை அணியை வீழ்த்திய உற்சாகத்தில் பஞ்சாப் அணியும் களமிறங்கின.

ஐபிஎல் 11வது சீசன் தொடங்கி நேற்றைய போட்டிக்கு முன்னதாக நடந்த 15 போட்டிகளிலும் டாஸ் வென்ற கேப்டன், முதலில் பவுலிங்கையே தேர்வு செய்தார். ஆனால், இந்த தொடரில் முதல்முறையாக நேற்று டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார்.

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் அஸ்வின், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய, ராகுலும் கெய்லும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். கடந்த போட்டிகளில் அடித்து ஆடி ரன்களை குவித்த ராகுல், நேற்று வெறும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு களத்திற்கு வந்த அகர்வாலும் 18 ரன்களில் வெளியேறினார். 9 ஓவருக்கு 68 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி எடுத்திருந்தது. அதன்பிறகு யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், தனது அதிரடியை காட்ட ஆரம்பித்தார். ரஷீத் கான் வீசிய ஒரு ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசினார். அதன்பிறகு போட்ட ஓவரையெல்லாம் அடித்து நொறுக்கினார் கெய்ல்.

அதிரடியாக ஆடி சதமடித்தார் கிறிஸ் கெய்ல். இந்த ஐபிஎல் சீசனின் முதல் சதம் இது. ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த கெய்ல், 11 சிக்ஸர்களை விளாசினார். கெய்ல் ஆடியபோது பீல்டர்களுக்கு வேலையே இல்லை. பார்வையாளர்களிடம் தான் பெரும்பாலான பந்துகள் சென்று விழுந்தன.

கடைசி ஓவரில் ஃபின்ச், தனது பங்கிற்கு இரண்டு சிக்ஸர்கள் அடிக்க பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களை குவித்தது. சிறந்த பவுலிங் அணியாக திகழும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சிதைத்து ரன்களை குவித்தார் கெய்ல்.

194 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் காயத்தால் ஒரே பந்தில் வெளியேறினார். சஹாவும் 6 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு கேப்டன் கேன் வில்லியம்சனும் மனீஷ் பாண்டேவும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். எனினும் அவர்களால் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. 

இதையடுத்து பஞ்சாப் அணி, 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத ஹைதராபாத் அணி முதல் தோல்வியை சந்தித்தது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ஹைதராபாத் அணியும் 4ல் 3 வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத் இரண்டாமிடத்திலும் பஞ்சாப் அணி மூன்றாமிடத்திலும் உள்ளன. சென்னை அணி நான்காமிடத்தில் உள்ளது.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடி மன்னன், யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios