இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஓவரை வீசிய ஜஸ்பிரித் பூம்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஜோஸ் பட்லரை ஆகியோரை வீழ்த்தியதோடு, 2 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார். இதனால் தான் அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் பர்வீஸ் ரசூலுக்குப் பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் பிளங்கெட்டுக்குப் பதிலாக லியாம் டாசன் இடம்பெற்றார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி - கே.எல்.ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.1 ஓவர்களில் 30 ஓட்டங்கள் சேர்த்தது. கோலி 15 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஜோர்டான் பந்துவீச்சில் டாசனிடம் கேட்ச் ஆனார்.

பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா 7, யுவராஜ் சிங் 4 ஓட்டங்களில் நடையைக் கட்ட, கே.எல்.ராகுலுடன் இணைந்தார் மணீஷ் பாண்டே. ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் அசத்தலாக ஆடிய ராகுல் 32 பந்துகளில் அரை சதம் கண்டார்.

தொடர்ந்து வேகம் காட்டிய அவர், ஜோர்டான் பந்துவீச்சில் சிக்ஸரை விளாச முயன்றபோது ஸ்டோக்ஸிடம் கேட்ச் ஆனார். அவர் 47 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்கள் குவித்தார்.

ராகுல் - பாண்டே ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் சேர்த்தது. இதன்பிறகு பாண்டே 30, பாண்டியா 2, அமித் மிஸ்ரா 0, தோனி 5 ஓட்டங்களில் வெளியேற, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் சேர்த்தது இந்தியா.\

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 4 ஓவர்களில் 22 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 38 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் ஆசிஷ் நெஹ்ரா 4 ஓவர்களலி 28 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பூம்ரா 4 ஓவர்களில் 20 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பூம்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3-ஆவது ஆட்டம் வரும் 1-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது.