இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா, சிட்னி டெஸ்டிலும் சதமடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு அழைத்து சென்றுள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. வழக்கம்போலவே தொடக்க வீரர் வழக்கம்போலவே ராகுல் 9 ரன்களில் இரண்டாவது ஓவரிலேயே வெளியேற, பின்னர் புஜாரா-மயன்க் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தது. 

மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகமாகி சிறப்பாக ஆடிய மயன்க், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 77 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இதையடுத்து புஜாரா - கோலி அனுபவ ஜோடியும் சிறப்பாக ஆடியது. ஆனால் கோலி 23 ரன்களில் ஆட்டமிழக்க, புஜாராவுடன் ரஹானே ஜோடி சேர்ந்த ரஹானே, இந்த முறையும் ஏமாற்றமளித்தார். 18 ரன்களில் வெளியேறினார் ரஹானே.

இதையடுத்து ஹனுமா விஹாரி புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நங்கூரம் போட்ட புஜாரா, டெஸ்ட் அரங்கில் 18வது சதத்தை பூர்த்தி செய்தார். அடிலெய்டு, மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த புஜாரா, இந்த தொடரில் தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் 3 சதங்களுடன் இரண்டாவது இடத்தை கவாஸ்கருடன் புஜாரா பகிர்ந்துள்ளார். 4 சதங்களுடன் இந்த பட்டியலில் கோலி முதலிடத்தில் உள்ளார். 

புஜாராவின் பொறுப்பான சதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. புஜாராவும் ஹனுமா விஹாரியும் சிறப்பாக ஆடிவருகின்றனர். இந்திய அணி 300 ரன்களை நெருங்கிவிட்டது.