ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துவருகிறது. புஜாரா தனது 17வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அதேநேரத்தில் சதத்தை நெருங்கிய கோலி, 82 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர் ஹனுமா விஹாரி 8 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் புஜாராவுடன் இணைந்து சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால், அறிமுக போட்டியிலேயே 76 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்.

பின்னர் புஜாரா - கோலி அனுபவ ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 68 ரன்களுடனும் கோலி 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தையும் புஜாரா - கோலி நிதானமாகவே ஆடியது. வழக்கம்போலவே பொறுப்புடன் ஆடிய புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார். கோலியும் அரைசதம் கடந்தார். இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை ஆஸ்திரேலிய அணியால் பிரிக்க முடியவில்லை. உணவு இடைவேளைக்கு பின்னர் சற்று ஆக்ரோஷமாக அடித்து ஆடினார் கோலி. ஒரு ஷாட் அடிக்கும்போது கோலிக்கு முதுகுவலி ஏற்பட்டது. பின்னர் உடற்தகுதி நிபுணர் வந்து சிகிச்சை அளித்துவிட்டு சென்றார். எனினும் விராட் கோலி அசாதாரணமாக உணர்வதை பார்க்கமுடிந்தது. சிறப்பாக ஆடிய கோலி, சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு 82 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து புஜாராவும் 106 ரன்களில் வெளியேறினார். 

இதையடுத்து ரோஹித் சர்மாவும் ரஹானேவும் இணைந்து ஆடிவருகின்றனர். இரண்டாம் நாள் டீ பிரேக் வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்துள்ளது. 

கோலி சதமடித்திருந்தால், அது சாதனை சதமாக அமைந்திருக்கும். இந்த டெஸ்ட் போட்டியில் கோலி சதமடித்தால், ஓராண்டில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்துகொள்ளலாம். 1998ம் ஆண்டு சச்சின் 12 சதங்களை விளாசினார். தற்போது கோலி இந்த ஆண்டில் மட்டும் 5 டெஸ்ட் சதங்கள், 6 ஒருநாள் சதங்களுடன் 11 சதங்களை விளாசியுள்ளார். எனவே இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் அடித்தால் சச்சின் சாதனையை சமன் செய்யலாம். ஆனால் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் கோலி சதமடிப்பதற்கான வாய்ப்பும் சூழலும் இருப்பது கடினம். எனவே முதல் இன்னிங்ஸில் அடித்திருந்தால்தான் சாதனை சாத்தியப்பட்டிருக்கும். ஆனால் கோலியோ அதை தவறவிட்டுவிட்டார்.