ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் புஜாரா சதமடிக்க, மயன்க், கோலி, ரோஹித் ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஹனுமா விஹாரியை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களுமே நல்ல பங்களிப்பை அளித்ததால் 443 ரன்களை குவித்தது இந்திய அணி. 7வது விக்கெட்டாக ஜடேஜாவை இழந்ததும் இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 6 ஓவர்கள் பேட்டிங் செய்து விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணியில் மிகவும் ஃபிட்டான வீரர் என்றால் அது கேப்டன் கோலி தான். வேகமாக ரன் ஓடுவதில் வல்லவர். ஃபீல்டர்கள் இல்லாத திசையில் அடித்துவிட்டு 2 ரன்கள், 3 ரன்கள் என வேகமாக ஓடி சேர்ப்பது கோலியின் வழக்கம். அதனால் கோலியுடன் மறுமுனையில் ஆடும் வீரருக்கு சிரமம்தான். ஏனென்றால் தொடர்ச்சியாக 2 ரன்கள், 3 ரன்கள் என்று ஓடிக்கொண்டேயிருப்பார். அதனால் எதிர்முனையில் இருக்கும் வீரருக்கு சோர்வாகும். கோலிக்கு அப்படியே எதிர்மறையானவர் புஜாரா. புஜாரா வேகமாக ஓடமாட்டார். அடிக்கடி ரன் அவுட் ஆகக்கூடியவர்.

ஆனால் இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதாலும் அடுத்தடுத்து களமிறங்குவதாலும் டெஸ்ட் போட்டிகளில் இவர்கள் இருவரும்தான் பெரும்பாலும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து ஆடுவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியிலும் அப்படித்தான். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். புஜாரா 106 ரன்களும் கோலி 82 ரன்களும் குவித்தனர். 

மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது பாட் கம்மின்ஸ் வீசிய 120வது ஓவரில் கோலி ஒரு ஃப்ளிக் ஷாட் அடித்துவிட்டு ஓடினார். அப்போது மூன்று ரன்களை ஓடி முடித்துவிட்டு நான்காவது ரன்னுக்கான அழைப்பை விடுத்தார். ஆனால் கோலி மூன்று ரன்களை முடித்த நிலையில், அப்போதுதான் மூன்றாவது ரன்னை பாதி பிட்ச்சை தாண்டி ஓடி கொண்டிருந்தார் புஜாரா. அதனால் நான்காவது ரன்னுக்கான கோலியின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.