ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் ஆடிவருகின்றன. 

சூப்பர் 4 சுற்றில் இந்தியா - வங்கதேசம் இடையே நடந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. 

இதையடுத்து இன்று நடக்கும் ஒரு போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று நடக்கும் போட்டியிலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் முனைப்பில் இந்திய அணியும் இந்தியாவிடம் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் உள்ளன. 

இன்றைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடும் உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான்(துணை கேப்டன்), அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா.

ஆசிய கோப்பையில் இதுவரை இந்திய அணி ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படாததால், திடீரென இந்த போட்டியில் களமிறக்கப்பட வாய்ப்பில்லை.