புரோ கபடி லீக் தொடரில் டபாங் டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்ற பெங்களூரு புல்ஸ் அணி முதலிடத்தில் நங்கூரம் போட்டு அமர்ந்துவிட்டது.
புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் அபாரமாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி தொடர் தோல்விகளை தழுவிவருகிறது.
கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸிடம் தோற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, இன்று பெங்களூரு புல்ஸை எதிர்கொண்டு ஆடியது. இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக ஆடியதால் போட்டி கடுமையாக இருந்தது. கடைசியில் பெங்களூரு புல்ஸ் அணி 37-31 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூரை வீழ்த்தியது. கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸிடம் தோற்ற ஜெய்ப்பூர் அணி இன்று பெங்களூருவிடம் தோற்றது.
அதற்கடுத்த போட்டியில் தமிழ் தலைவாஸும் டபாங் டெல்லியும் மோதின. இந்த சீசனின் முதல் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்ற டபாங் டெல்லி அணி அதன்பின்னர் தொடர் தோல்விகளை தழுவிவருகிறது. அதேவேளையில், முதலில் தொடர் தோல்விகளை தழுவிவந்த தமிழ் தலைவாஸ் அணி இப்போது தொடர்ச்சியாக வெற்றி பெற்றுவருகிறது.
கடந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, இன்றைய போட்டியில் டபாங் டெல்லியை 49-39 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது.
